மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் திண்டுக்கல் சுரபி நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
முத்தனம்பட்டி சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் அங்கு பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
மாணவிகளின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பின்பு போக்ஸோ உட்பட 14 பிரிவுகளில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜோதிமுருகன் கைது செய்யப்பட்டான். இருப்பினும் கீழமை நீதிமன்றத்தில் ஒரே வாரத்தில் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் கிடைத்தது.
இதற்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜாமீனை ரத்து செய்யும்படி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்து, 3 நாட்களில் அவரை சரணடையும்படி உத்தரவிட்டார்.