லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில், பாஜ கூட்டணி 273 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. சமாஜ்வாடி மட்டும் 111 தொகுதிகளை கைப்பற்றியது. மெயின்புரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் அகிலேஷ் யாதவ், பாஜ எம்பி எஸ்பி சிங் பாகேலை 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அகிலேஷ் யாதவ் அசம்கர் மக்களவை உறுப்பினராக ஏற்கனவே பதவி வகித்து வந்தார். எம்எல்ஏவாக தேர்வானதால் அவர் இரண்டில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், தேசிய அரசியலில் கவனம் செலுத்த அகிலேஷ் மக்களவை எம்பியாக நீடிக்க விரும்புவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் திடீர் மாற்றமாக மாநில அரசியலில் அகிலேஷ் தீவிரமாக கவனம் செலுத்த முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அகிலேஷ் தான் வகித்து வந்த மக்களவை எம்பி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.