கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி வீரர் மொயீன் அலி விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முந்தைய சீசனில் விளையாடிய வீரர்கள் பலர் இரு அணிகளிலும் இல்லாத நிலையில் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் மொயீன் அலி, முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “மொயீன் அலி திங்கள்கிழமை மும்பை வந்தடைவார் என எதிர்பார்த்தோம், ஆனால் அவருக்கு விசா கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
எனவே மொயீன் அலி எப்போது மும்பை வருவார் என்பது எங்களுக்கே சரியாக தெரியவில்லை. மேலும் அவர் தனக்கான விசாவை பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியே ஒப்படைத்துவிட்டார்.
ஆனாலும் அவருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.ஒருவேளை மொயீன் அலி புதன்கிழமை வந்தாலும் கொரோனா விதிமுறை காரணமாக மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மொய்ன் அலி விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.