தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை திமுக அரசு உயர்கல்வி பயிலும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனால், தமிழக அரசின் திருமண உதவித்தொகைக்காக விண்ணப்பித்த 3 லட்சம் பெண்களுக்கு திருமண உதவித் தொகை கிடைக்குமா என்பது குறித்து அதிமுக மற்றும் திமுக இடையே சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை திமுக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியுள்ளதை திமுக அரசு சட்டமன்றத்தில் திங்கள்கிழமை நியாயப்படுத்தியுள்ளது. மேலும், முந்தைய திருமண உதவித் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை பட்டியலிட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் அல்லது தாலிக்கு தங்கம் திட்டம் என்று அறியப்படும் திட்டத்தை மாற்றியது குறித்து அதிமுக சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ கே.ஏ. பாண்டியன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 24.5% பேர் மட்டுமே தமிழ்நாடு ஒருங்கிணைந்த வறுமைக்கட்டுப்பாட்டு சேவையில் (டிஐபிபிஎஸ்) பயனடையத் தகுதியுடையவர்கள் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உதவி வழங்கப்பட வேண்டுமானால், அரசின் கருவூலத்திற்கு ரூ.3,000 கோடிக்கு மேல் தேவைப்படும் என்று கூறினார். மேலும், பல விண்ணப்பங்கள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால், தற்போது நீட்டிக்கப்பட்டால், திருமண உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கம் நிறைவேறாது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
முந்தைய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதை பல தணிக்கை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன என்பதை நிதியமைசர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டினார். மேலும் பெண்களின் உயர்கல்விக்கான உதவி வழங்கும் புதிய திட்டம் மாணவிகளை கல்லூரியில் சேர்க்கும் விகிதத்தை அதிகரிக்கும் என்று வாதிட்டார்.
சட்டப்பேரவை விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை திமுக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இந்த புதிய திட்டம் பெண்களின் உரிமைகளை உறுதி செய்யும் திமுகவின் கொள்கையின் மற்றொரு வடிவம். இந்த புதிய திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முந்தைய திட்டத்தில், ஏற்கெனவே 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அவர்கள் முந்தைய திட்டத்திலிருந்து பயனடைவார்கள் என்று நம்பலாமா? குறைந்த பட்சம், தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டவர்களுக்காவது பலன்கள் நீட்டிக்கப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநில அரசு இதைப் பற்றி சிந்திக்கும் என்று கூறினார்.
இதனால், முந்தைய திட்டமான தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்த 3 லட்சம் பெண்களுக்கு திருமண உதவித்தொகை கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு யோசிக்கும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளதால், விண்ணப்பித்துள்ளவர்கள் திருமண உதவித் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“