பனாஜி: உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பொறுப்பேற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர, உபி, மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடித்தது. இதில் நீண்ட இழுபறிக்குப் பின், 11 நாட்கள் கழித்து, உத்தரகாண்ட், கோவா முதல்வர்கள் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, உத்தரகாண்ட்டில் புஷ்கர் சிங் தாமியும், கோவாவில் பிரமோத் சாவந்த்தும் மீண்டும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் பதவியேற்றுக் கொள்கிறார்கள். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மற்றும் இமாச்சல முதல்வர்கள் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஜெய் ராம் தாகூர் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல, கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் வருகிற 28ம் தேதி பதவியேற்க உள்ளார். இவ்விழாவிலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தேசிய தலைவர் ேஜபி நட்டா, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜ ஆளும் 7 மாநில முதல்வர்கள் விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து முன்னதாக, மணிப்பூர் மாநில பாஜ முதல்வராக பிரேன் சிங் நேற்று பதவியேற்றார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மணிப்பூர் மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள என்.பிரேன் சிங்குக்கு எனது வாழ்த்துகள். ஆட்சிக்காலம் வெற்றிகரமானதாக அமைய அவருக்கும் அவரது அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துகள்’ என கூறி உள்ளார்.