பெங்களூரு:வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் தகராறு ஏற்படாத வகையில், நவீன தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறியோரை கண்காணிக்கும் கருவியை போக்குவரத்து போலீசார் பயன்படுத்துகின்றனர்.
பெங்களூரு நகரின் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்தியிருந்தால், அதை போக்குவரத்து போலீசார், ‘டோயிங்’ வாகனம் மூலம், போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்வர். அங்கு அபராதம் செலுத்தி, வாகனத்தை மீட்க வேண்டும்.நகரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பல இடங்களில் வாகனங்களை, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த முடியாமல், ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி விட்டு சென்ற விடுகின்றனர். இவற்றை அகற்ற வந்தால், போலீஸ் மற்றும் ஊழியர்களுடன் வாகன உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.இவ்விஷயம் அரசின் கவனத்துக்கு சென்றது. வாகனங்களை இழுத்து செய்ய அரசு தடை விதித்திருந்தது.
இதையடுத்து, போக்குவரத்து விதியை மீறுவோரை நிறுத்தி, ‘இதுபோன்று செய்யாதீர்கள். உங்களின் நன்மைக்காகவே சொல்கிறோம்’ என, கூறி வந்தனர்.இதன் ஒரு பகுதியாக, ஏ.என்.பி.ஆர்., எனும் தானியங்கி வாகன நம்பர் பிளேட் பதிவு செய்யும் இயந்திரத்தை வைத்து உள்ளனர்.
இதன் மூலம், விதிமுறை மீறும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவர்களை நிறுத்துகின்றனர்.பின், அவர்கள் பயணித்த வாகனத்தின் எண்ணை, தங்கள் மொபைல் போன் செயலி மூலம், அந்த வாகனம் விதிமுறை மீறியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர். மீறியிருக்கும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
Advertisement