சாந்திநகர்:நிமான்ஸ் மன நல மருத்துவமனையின் தமிழ் ஊழியர்களின் நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் குழுமம் சார்பில், இரண்டாம் ஆண்டு, ‘நம்ம வீட்டு விழாவை’ குடும்பத்தினருடன் கோலாகலத்துடன் கொண்டாடினர்.
பெங்களூரு நிமான்ஸ் மன நல மருத்துவமனையில் நுாற்றுக்கணக்கான தமிழர்கள் பணியாற்றுகின்றனர். தமிழர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் 2015 ல், ‘தமிழால் இணைவோம்’ என்ற வாக்கியத்துடன், நிமான்ஸ் தமிழ் நண்பர்கள் குழுமம் என்ற அமைப்பை ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் பத்து பேருடன் துவக்கப்பட்ட அமைப்பில், தற்போது 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேரும் வகையில், 2021ல் முதல் முறையாக ‘நம்ம வீட்டு விழா’ என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்டது. இரண்டாவது ஆண்டாக, பெங்களூரு சாந்திநகரில் உள்ள ஹாக்கி மைதான அரங்கில் நடந்தது. தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். கனிமொழியின் தமிழ் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
ஓய்வுபெற்ற ஊழியர் தேவன் வரவேற்றார்.அமைப்பின் எதிர்கால நோக்கம் குறித்து, செயலர் டாம்னிக் சேவியர் மணி விளக்கினார். தமிழ் பாரம்பரிய உணவு முறை குறித்து, துணை தலைவர் முருகன் பேசினார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, திருநெல்வேலி சாரதா மகளிர் கல்லுாரியின் தமிழ் துறை தலைவி தனலட்சுமி, ‘அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஆண்டு கணக்கு அறிக்கையை, பொருளாளர் வினோத் தாக்கல் செய்தார். கொரோனா மற்றும் உக்ரைனில் பலியானோருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இணை செயலர் கார்த்திக் நன்றி கூறினார்.ஆண்கள் வேட்டி சட்டையுடனும், பெண்கள் சேலையுடனும் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அனைவரும் அறுசுவை உணவு ருசித்து மகிழ்ந்தனர்.
Advertisement