ஹைதராபாத்தில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் போய்கூடா என்ற பகுதியில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. அதில் இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு தீ மளமளவென எரிந்து கிடங்கு முழுவதும் பரவியது.
இதனால் உள்ளே இருந்தவர்கள் அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. ஒருபுறம் தீயை கட்டுப்படுத்திக் கொண்டே உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 11 பேரின் சடலங்கள் அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தித்துறை அமைச்சர் சீனிவாசன் ஆய்வு செய்தார். உயிரிழந்த 11 பேரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், மேலும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM