காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான
பிரியங்கா காந்தி
அரசியலில் பெரியளவில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். சோனியா, ராகுல் பங்கேற்கும் அரசியல் பிரசாரக் கூட்டங்களில் மட்டுமே பிரியங்கா காந்தி தலைகாட்டி வந்தார். ஆனால், பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் தோல்வி முகத்தை சந்தித்து வந்த காரணத்தால், பிரியங்காவை களமிறக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டது. மேலும், பிரியங்காவால் மட்டுமே சரிவில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீட்க முடியும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.
‘அயர்ன் லேடி ஆஃப் இந்தியா’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் இந்திரா காந்தி. சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் இந்திரா காந்தி முக்கியமானவர். தனது பாட்டி இந்திரா காந்தியை போன்றே, தலைமுடி அலங்காரம், உடை உடுத்தும், பேசும் பாணியை கொண்டிருக்கும் பிரியங்கா, இந்திராவை போன்று எளிதாக மக்களுடன் கலந்து நிற்கும் திறன் கொண்டவர்.
இரும்புப் பெண்மணி இந்திராவின் முகத்தில் ஒரு உறுதிப்பாடு தெரியும். ஆனால், மக்களுடன் கலந்துவிட்டால் அவர் அன்பானவராக மாறிவிடுவார். எனவே, அவர் மீது மக்களுக்குப் பிரியம் இருந்தது. அதுபோல தான் பிரியங்காவும். இது அவருக்கான ப்ளஸாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரமாஸ்திரமாக, நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் பிரியங்கா காந்தி.
இதனிடையே, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் பிரியங்கா காந்தியை அம்மாநிலத்தின் பொறுப்பாளராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே காங்கிரஸ் மேலிடம் நியமித்தது. அவரும் அங்கு தீவிரமாக பணியாற்றி வந்தார்.
உத்தரப்பிரதேச தேர்தல் என்றாலே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும். கடந்த முறை தேர்தலின் போது இதே எதிர்பார்ப்பு நிலவியது. அக்கட்சிக்கு தேர்தல் உத்தியாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோரும் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால், பிரியங்கா காந்தி பிரசாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். அதேபோல், இந்த முறையும் தேர்தல் பிரசாரத்தோடு நிறுத்திக் கொண்டார் பிரியங்கா காந்தி.
இருப்பினும், உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அண்மையில் டெல்லியில் நடந்தது. அதில், பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜ்யசபாவுக்கு அனுப்ப அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு எம்.பி.,க்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் இறுதியில் நடைபெறும் என தெரிகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருப்பதால், அங்கிருந்து
ராஜ்யசபா
எம்.பி.யாக பிரியங்கா காந்தி எளிதாக தேர்வாகி விடுவார் என்கின்றனர்.
மக்களவையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருப்பது போல, ராஜ்யசபாவில் பிரியங்காவிற்கு வாய்ப்பு வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருக்கும் நிலையில், மாநிலங்களவையில் பெரும்பாலும் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்களையே கட்சிகள் தேர்ந்தெடுப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இந்திரா காந்தி போன்று தீரமாகவும், தெளிவாகவும் கருத்துகளை துணிந்து உறுதியாக வெளிப்படுத்தும் திறன் கொண்ட பிரியங்கா காந்தி மாநிலங்களவைக்கு செல்வது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.