சென்னை:
5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை கடந்த 4½ மாதங்களாக அதிகரிக்கப்படாமல் இருந்தது.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் எந்த நேரத்திலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்று கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பேரலுக்கு 120 டாலரை எட்டி உள்ளது.
இதனால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலையை கண்டிப்பாக உயர்த்தியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவானது.
137 நாட்களுக்குப் பிறகு நேற்று பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டது. சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டீசல் விலையில் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.95 காசுகளாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல-டீசல் விலை உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. அதுபோல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இந்தியாவின் எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே நிவர்த்தி செய்யப்பட்டு வருவதால் பெட்ரோல்-டீசல் விலை அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 2 நாட்களாக விலை உயர்வு அதிகரிக்கப்பட்டாலும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இன்னமும் ஒரு லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை இழப்பு ஏற்படும் நிலைதான் உள்ளது. எனவே பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று எண்ணை நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே வரும் நாட்களில் பெட்ரோல்-டீசலுக்கு கூடுதலாக பணம் செல வழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இதற்கிடையே உணவு பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல்- டீசல் விலையும் உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும்அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது.