அழைப்பிதழில் குறிப்பிட்டதுபோல், தங்கள் மகள் திருமணத்தில் கிடைத்த மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் சிறப்புப் பள்ளிக்கு வழங்கியுள்ளனர் மதுரையை சேர்ந்த ஆத்மராவ் குடும்பத்தினர்.
மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் கடந்த மார்ச் 16-ம் தேதி திருமணம் நடந்தது.
திருமண அழைப்பிதழில், `அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், திருமண நாளில் யார், எவ்வளவு மொய் வைத்தார்கள் என்ற விவரங்கள் தெரியாமல் இருக்க, அவர்கள் மொய்ப்பணத்தை அங்கிருந்த குடத்துக்குள் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்போது நம்மிடம் பேசிய மணமகளின் தந்தை ஆத்மராவ், “வாழ்ந்த வாழ்க்கையில பெரிய அளவில் யாருக்கும் உதவி பண்ண வாய்ப்பு அமையல. அதான், என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணினேன். குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதுக்குத் தயங்கினாங்க. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க” என்றார். இந்த முன்னெடுப்பால், பல ஊர்களில் இருந்தும் ஆத்மராவ் குடும்பத்துக்குப் பாராட்டுகள் குவிந்தன.
தற்போது நம்மை தொடர்பு கொண்ட ஆத்மராவ், “மொய்யாகக் கிடைத்த 44,930 ரூபாயை ஆற்றவற்ற சிறப்புப் பள்ளியான அன்பகத்துக்கு செக்காக வழங்கினோம்.
அவர்கள் அங்குள்ள பிள்ளைகள் முன்னிலையில் எங்களை கௌரவித்தார்கள். இந்த சம்பவம் எங்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது” என்றார்.
நெகிழ்ச்சி, மகிழ்ச்சி!