இலங்கை பொருளாதார நெருக்கடி: 4 மாத கைக் குழந்தையுடன் தமிழகத்தை நாடிய இலங்கை தமிழர்கள்

Arun Janardhanan 

மோசமடையும் இலங்கைப் பொருளாதாரத்தின் தாக்கத்தை தற்போது தமிழக கடற்கரைகளிலும் உணரும் நிலை உருவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 16 இலங்கை தமிழர்கள், 2 குழுவாக தமிழகத்தை வந்தடைந்துள்ளனர். மூன்று குழந்தைகளுடன் தமிழகம் நோக்கி வந்த அவர்கள் ராமேஸ்வரம் அருகே உள்ள தீவில் தனித்துவிடப்பட்டிருந்தனர். அவர்களை இந்திய கப்பற்படை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. 10 பேரைக் கொண்ட மற்றொரு குழு இரவு தமிழகத்தை அடைந்தது.

வேலையின்மை மற்றும் உணவுப் பற்றாக்குறை இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் அகதிகளாக அவர்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்று தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களை அதிகமாக கொண்டிருக்கும் வடக்கு மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள், இது வெறும் துவக்கத்தான் என்பதை எச்சரிக்கின்றன. வருகின்ற வாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தை நோக்கி வரலாம் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஜேந்திரன் (24), அவருடைய மனைவி மேரி க்ளாரின் (22), அவர்களின் மகன் நிஜாத் (4 மாதம்), மற்றும் தியோரி ஆனிஸ்டன் (28), அவரின் குழந்தைகள் எஸ்தர் (9) மற்றும் மோசஸ் (6) என முதலில் 6 பேர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். மற்றொரு குழுவில் 3 பெண்களும், 5 குழந்தைகளும் அடங்குவார்கள்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் தவித்த அம்மக்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். மீனவர் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்து அரிச்சல் முனை அருகே அமைந்திருக்கும் நான்காவது தீவில் இறக்கிவிட கூறியதாக, முதலில் வந்த 6 பேர் கொண்ட குழு குறிப்பிட்டுள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் வருவாய் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹோவர்படகு மூலம் அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு கடற்படை முகாமில் உணவு கொடுக்கப்பட்டு பிறகு காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் இருக்கும் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரூ. 3 லட்சம் கொடுத்து ஃபைபர் படகில் மற்றொரு குழு நேற்றிரவு தமிழகம் வந்தடைந்தது. மன்னாரில் இருந்து தமிழகம் நோக்கி வந்த அந்த படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட, ஒரு நாள் முழுவதும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர் அம்மக்கள். பிறகு அந்த கோளாறு சரி செய்யப்பட்டு இரவு 9 மணிக்கு ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தை வந்தடைந்தனர்.

எனக்கு தெரிந்த நிறைய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துள்ளனர் என்று கூறுகிறார் மன்னாரில் இருக்கும் செயற்பாட்டாளர் வி.எஸ். சிவகரன். இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர், ”அவர்களில் ஒரு சிலருக்கு தமிழகத்தில் தொடர்பு உள்ளது. ஒரு சிலரின் உறவினர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். நாளை என்ன நடக்கும் என்ற அச்சம் எங்கள் மத்தியில் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 500-ஐத் தொட்டுவிடும். இன்று ஒரு கிலோ அரிசி 290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சக்கரையும் அதே விலைக்கு விற்கப்படுகிறது. 400 கிராம் பால் பவுடர் 790க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறினார்.

கடந்த மூன்று நாட்களில் பால் பவுடரின் விலை மட்டும் 250 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. கடந்த வாரத்தில், பேப்பர் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கை அரசு தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது என்று மேற்கோள்காட்டினார் சிவகரன்.

1989ம் ஆண்டு உள்நாட்டுப்போர் நடைபெற்ற காலத்தில் மக்கள் வெளியேறியதைப் போன்று தற்போதும் மக்கள் வெளியேறத் துவங்கியுள்ளனர். சிவகரனின் இந்த கணிப்பையே இலங்கை அரசு மற்றும் அரசியல் பார்வையாளார்களும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளனர். 2009ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு மக்கள் வெளியேறுவது குறைந்து போனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலங்கை தமிழர்கள் மீன்பிடி படகுகள் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தப் பொருளாதார நெருக்கடி உழைக்கும் வர்க்கத்தினரை வெகுவாக பாதித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் நிலவிவரும் பணவீக்கத்தின் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் அதிகம் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் புலம் பெயர்ந்த நிலையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மக்கள் இந்தியாவை நாடி வருவதற்கான வழிகளை யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். இது வெறும் ஆரம்பம் மட்டுமே பொருளாதாரம் சீராகும் வரை அதிக மக்கள் இலங்கையை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 17ம் தேதி அன்று இந்தியா இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன் வசதியை வழங்கியது. நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றும் என்று ஒரு நாள் முன்பாக அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். விலையேற்றம் மற்றும் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத மக்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று திரண்டு இலங்கையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் கொழும்புவின் காலே சாலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஒரு சிலர் அதிபரின் அலுவலகத்திற்குள்ளும் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை அன்று, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய இலங்கை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரும் அந்நாட்டின் துறைமுக அதிகார சபைக்கு முன்னர் தலைமை தாங்கிய உயர்மட்ட வர்த்தகத் தலைவருமான நாலக கொடஹேவா, நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சீராகி வருகிறது என்று குறிப்பிட்டார்.

“சரியான நேரத்தில் நிதி உதவி வழங்கிய இந்தியாவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். கொழும்பு போன்று மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் வடக்கு பிராந்தியங்கள் மற்றும் நகரங்களுக்கு வெளியே உள்ள பகுதிளின் நிலைமையும் சீராக வேண்டும். கணிசமாக உயர்ந்து வரும் பணவீக்கத்துடன் நாம் கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறோம் என்பது உண்மைதான், இவை அனைத்தும் டாலர் நெருக்கடியுடன் இணைக்கப்பட்டுள்ளன, ”என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.