கூடுதல் கட்டண விவகாரம்; வருகை பதிவேட்டில் முறைகேடு; தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு ரூ. 3 கோடி அபராதம்

HC orders Rs.3 crore penalty on private dental college: நீதிமன்றத்தில் இருந்து சாதகமான உத்தரவைப் பெறுவதற்காக, கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சென்னையைச் சேர்ந்த மாதா பல் மருத்துவக் கல்லூரி செய்த முறைகேடுகள் குறித்து அதிர்ச்சியடைந்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது.

சென்னை குன்றத்தூர், மாதா பல் மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த நிலையில், கூடுதல் கட்டணம் செலுத்தாததால், கடந்த 4 ஆண்டுகளாக கல்லூரி படிப்பு நிறைவடைந்ததற்கான சான்றிதழை கல்லூரி நிர்வாகம் எஸ்.சி.ராஜராஜேஸ்வரி மற்றும் ரம்யா பிரியாவுக்கு வழங்க மறுத்துள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக வேலைக்குச் செல்ல முடியவில்லை எனவே, எந்தவொரு கட்டணமும் கேட்காமல், படிப்பு முடித்ததற்கான சான்றிதழை வழங்கவும், இன்டர்ன்ஷிப்பை முடிக்க அனுமதிக்கவும் கல்லூரிக்கு உத்தரவிடக் கோரி எஸ்.சி.ராஜராஜேஸ்வரி மற்றும் ரம்யா பிரியா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுக்களை எதிர்த்த கல்லூரி நிர்வாகம், மனுதாரர்கள் இன்டர்ன்ஷிப்பில் தேவையான வருகையை பராமரிக்கத் தவறியதால், அவர்களுக்கு நிறைவுச் சான்றிதழ் மறுக்கப்பட்டது என்று கூறியது. ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளின் வருகைப் பதிவேட்டில் திருத்தம் செய்தததாக மாணவிகள் சார்பாக கூறப்பட்டது.

இதனையடுத்து, கல்லூரி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வருகைப் பதிவேடுகளை நீதிமன்றம் ஆய்வு செய்தபோது, வருகைப் பதிவேட்டில் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையும் படியுங்கள்: 45 கோடி மோசடி.. சென்னை துறைமுக அறக்கட்டளை அதிகாரி கைது!

இது தவிர, பல்கலைக் கழகம் நடத்திய விசாரணையில், மனுதாரர்களிடம் கல்லூரி அதிக கட்டணம் வசூலித்ததும், கூடுதல் கட்டணம் செலுத்தக் கோரி, இன்டர்ன்ஷிப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கல்லூரியின் முறைகேடுகளை கண்டு அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதித்ததுடன், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.24 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனுதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தை 18% வட்டியுடன் திருப்பித் தருமாறும் கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், கல்லூரிகளில் வருகைப் பதிவேடுகளில் மேலும் முறைகேடுகள் நடைபெறுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை நிறுவுவதற்கு உரிய உத்தரவை பிறப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, “கட்டணத்தைச் செலுத்தாத காரணத்திற்காக ஏழை மாணவர்களின் வருகையை மாற்றும் நிலைக்கு கல்லூரி சென்றபோது, ​​கல்லூரியை ஒரு நல்ல கல்வி நிறுவனமாக கருத முடியாது” என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார்.

மேலும், கல்லூரியின் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் பல்கலைக்கழகத்தின் அனுமதியை திரும்பப் பெறுதல், எதிர்கால சேர்க்கைக்கான அனுமதியை திரும்ப பெறுதல், தகுதி நீக்கம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள், முறைகேடுகள் போன்றவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு மற்றும் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.