உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு..!!: விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பலர் பங்கேற்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அம்மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். ஆளுநர் குர்மீத் சிங் புஷ்கர் சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோவா முதல்வர் பிரமோத் தவான், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், அரியானா மாநில முதல்வர் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனில்  நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு மீண்டும் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதையடுத்து இன்று புஷ்கர் சிங் தாமிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இன்று பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என மாநில பாஜக தலைவர் தெரிவித்தார். பதவியேற்பு விழாவில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும்வகையில் ஏற்பாடுகளும், பல அடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டது. புஷ்கர் சிங் தாமி 1991-ம் ஆண்டிலேயே பாஜக இளைஞரணியின் உறுப்பினரானார். முதல்வராக கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களைச் சந்தித்து, நாங்கள் வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். நாங்கள் மக்களுக்காக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் எனவும், பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைகொண்ட திட்டத்தை வழங்கியுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றவாறு செயல்பட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவோம். பொது சிவில் சட்டம் முக்கியமானது. அதையும் அமல்படுத்துவோம் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.