வேகம் இல்லா வாழ்க்கை வீண் என்ற முடிவுக்கு நாம் எப்போதோ வந்துவிட்டோம். அதனால், எங்கும் வேகம் எதிலும் வேகம் என்றிருக்காவிட்டால் அஃறிணையை போல உற்றுநோக்குவதைத் தவிர்க்க முடியாத சூழல். மென்மேலும் வேகம் என்றிருப்பது மட்டுமே இலக்கு என்றாகிவிட்ட நிலையில், சந்தைப்படுத்துதல் உத்திகளிலும் அது ஒன்றாகிப் போனதில் ஆச்சரியமில்லை.
ஆனால், அதன் பின்விளைவுகளை யோசிக்க வேண்டாமா என்று கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது
ஸொமோட்டோ
நிறுவனத்தின் ’10 நிமிடத்தில் டெலிவரி’ அறிவிப்பு. ஏற்கனவே மருந்துப் பொருட்களை
10 நிமிடத்தில் டெலிவரி
செய்கிறோம் என்ற அறிவிப்பு வெளியானதையடுத்து, தற்போது உணவு வழங்கலிலும் இதே அணுகுமுறையைக் கையிலெடுத்திருக்கிறது இந்நிறுவனம். தொழில் போட்டிக்காக, இந்த நடைமுறையை நாளடைவில் பிற நிறுவனங்களும் பின்பற்றலாம் என்பதே இது பற்றி உடனடியாக விவாதித்து தீர்வை எட்ட வேண்டிய பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் திருப்தி!
ஒரு குடும்பம் உணவகத்திற்குச் செல்கிறது என்றால், கை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்த சில நிமிடங்களில் உணவை பரிமாற வேண்டுமென்று எதிர்பார்க்கும். நிமிடங்கள் அதிகமானால் சலிப்பு தட்டும். கேட்டவுடன் உணவு பரிமாறப்பட்டால் அது சரியான முறையில் சமைக்கப்பட்டதுதானா என்ற சந்தேகம் எழும்பும். நாம் ஆர்டர் செய்யும் உணவைச் சமைக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொறுத்து இது மாறுபடலாம். சரியான நேர அவகாசத்தில், சரியான தரத்தோடு உணவை உண்டால் மட்டுமே அக்குடும்பம் திருப்தியாக அவ்வுணவகத்தை விட்டு வெளியேறும். கீழ், நடுத்தர, உயர் மற்றும் அதி உயர்ந்த உணவகங்கள் என அனைத்து வகைகளுக்கும் இது பொருந்தும்.
கோப்புப்படம்
வீட்டிலிருந்து உணவை ‘ஆர்டர்’ செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் மேலே சொன்னவை கட்டாயம் பொருந்தும். ஆனால், அவர்களுக்கு வேண்டியதை உடனடியாகத் தருவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன இத்துறையிலுள்ள நிறுவனங்கள். உடனடியாகச் சமைக்க இயலாத அவசரத்தில் அல்லது கட்டாயத்தில் மட்டுமே அவர்கள் உணவைப் பெற விரும்புவதாகக் கருதுகின்றன. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்ட சில உணவகங்கள் மட்டும் ‘டோர் டெலிவரி’யை வழங்கி வந்தன. அரை மணி முதல் ஒரு மணிநேர அவகாசத்தில் இச்செயல்பாடு நிகழ்ந்து வந்ததையே விமர்சித்தனர் பலர். அப்பணியை மேற்கொள்வோர் கண்மூடித்தனமாக வாகனமோட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டதுண்டு. பெரும்பாலும் அசைவ உணவகங்கள் மட்டுமே இச்சேவையை வழங்கி வந்தன.
ஸொமோட்டோ,
ஸ்விக்கி
போன்ற நிறுவனங்கள் மூலமாக, அவற்றில் பதிவு செய்யப்பட்ட எந்த உணவகத்திலும் உணவைப் பெற முடியும் என்ற நிலை வந்தபிறகு அப்பேச்சு அமுங்கிப் போனது. 20 நிமிடங்கள்முதல் அரைமணி நேரத்தில் டெலிவரி என்ற அளவுக்கு இறங்கியிருக்கிறது நிலைமை. இந்த சூழலில்தான், ஸொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ’10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ’சில உணவுகளைத் தயாரிக்கவே குறைந்தது 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஆகுமே’ என்று உணவகங்கள் எதிர்க்குரல் எழுப்ப, ’காபி, டீ, மோமோஸ், ஆம்லெட், ரொட்டி, பிரியாணி, மோமோஸ் போன்றவை டெலிவரி செய்யப்படும். இதற்காகவே, புதிதாக உணவு நிலையங்களை ‘‘ஸொமோட்டோ இன்ஸ்டண்ட்’ என்ற பெயரில் உருவாக்கி வருகிறோம்’ என்றும் பதிலளித்திருக்கிறார்.
10 நிமிடங்களில் டெலிவரி செய்வதால் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது; சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி உண்டு; பணியாளர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது என்று பல விளக்கங்களையும் கோயல் தந்திருக்கிறார். நாங்கள் இதனைச் செயல்படுத்தாவிட்டால் வேறு யாரோ இதனை முயற்சிப்பார்கள் என்ற சால்ஜாப்பும் சொல்லியிருக்கிறார்.
கோப்புப்படம்
தானியங்கி முறையில் உணவைத் தயாரிக்கும் வகையிலான எந்திரங்கள் உருவாக்கலிலும், மெய்நிகர் முறையிலான பரிமாற்றங்களுக்கான மென்பொருள் செயல்பாட்டிலும் ஸொமோட்டோ மேற்கொண்டுள்ள சமீபகால முதலீடுகள் இந்த அறிவிப்புக்கு உறுதுணையாக இருக்கலாம். புதிதாக பல உணவகங்களோடு கொள்ளும் இணக்கமான உறவும் இதனைச் சாத்தியப்படுத்தலாம். வெறுமனே உணவின் தரம், ருசி, உடனடியாகப் பசியாற்றும் சேவை போன்றவற்றால் சில நேரங்களில் சில வாடிக்கையாளர்கள் திருப்தியடையலாம். ஆனால், அதைத் தாண்டி இப்பணியில் ஈடுபடுவோரின் வாழ்க்கை பாதுகாப்பு குறித்த கேள்வியே இது குறித்த விமர்சனங்களில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது.
கேள்விக்குறியாகும் சாலை பாதுகாப்பு!
கோவிட்-19 காரணமாக 2020-21 ஆண்டுகளில் நாடெங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை அலட்சியமாகக் கடந்துவிடக் கூடாது. கடந்த வாரம் சர்வதேச கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் விபத்துகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 1.5 லட்சம் பேர் மரணமடைவதாகவும், 3 லட்சம் பேர் வரை படுகாயம் அடைவதாகவும் தெரிவித்தவர், இவர்களில் 70 சதவிகிதம் பேர் 18 – 45 வயதிற்குட்பட்டவர்கள் என்றிருக்கிறார்.
2019 அக்டோபரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட அறிக்கையில், சாலை விபத்துகளில் பலியாவோரில் 37% பேர் இருசக்கர வாகனங்களில் பயணித்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற சாலைகள், ஹெல்மெட் அணியாமை, போதுமான பயிற்சியின்மை, உரிமம் வழங்குதலில் முறைகேடுகள் போன்றவை இதற்குக் காரணங்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கோவிட்-19க்குப் பின்னர் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன. 2025இல் இருசக்கர வாகன விற்பனை 26.6 மில்லியனாக இருக்குமென்று கணித்துள்ளது யுனிவ்தடோஸின் ஆய்வு. இருசக்கர வாகன விற்பனை ஏற்றம் காண்பதற்கு பொதுப்போக்குவரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அதிருப்தியும் ஒரு முக்கியக் காரணம். அது மட்டுமல்லாமல், அதிக திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்ட வாகன அறிமுகங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இவை எல்லாமே, நம் வாழ்வோடு வேகத்தை பிணைக்கின்றன. இது உணவு வழங்கலிலும் எதிரொலிக்கும்.
கோப்புப்படம்
உணவு வழங்கலில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மிகத்தேர்ந்த வாகனமோட்டிகள் என்று பதில் கூறுவதன்மூலம், சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறித்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முட்டு கொடுக்கலாம். மேற்கண்ட பணியாளர்கள் சாலையில் சீறிப்பாயும்போது, உடன் பயணிப்பவர்கள் எத்தகைய மனநிலைக்கு ஆளாகின்றனர் என்பதும், அதன் தொடர்ச்சியாக விபத்துகளைச் சந்திக்கின்றனர் என்பதும் கவனப்படுத்தப்பட வேண்டும். 10 நிமிடத்தில் டெலிவரி எனும் கொள்கை முடிவு உருவாக்கும் பதற்றம் கண்டிப்பாக சாலைகளில் எதிரொலிக்கும்.
சாலைகளில் இருசக்கர வாகன பந்தயங்களை மேற்கொள்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
பணியாளர்கள் மீதேறும் சுமை!
உணவு வழங்கும் துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன இது தொடர்பான தகவல்கள். ஏற்கனவே குறைந்த கூலி, நிச்சயமான வருமானமின்மை, விபத்து அச்சுறுத்தல், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்தாக வேண்டிய கட்டாயத்தினால் மன அழுத்தம் போன்றவற்றை இப்பணியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வாகனப் பராமரிப்புச் செலவு குறித்த கவலையும் இதோடு சேரும். ஸொமோட்டோவின் 10 நிமிட டெலிவரி அறிவிப்பு, குறிப்பிட்ட வாகனங்களில் அல்லது தரக்கட்டுப்பாட்டில் அமைந்தவற்றுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையை ஏற்படுத்தலாம். ஏற்கனவே இருக்கும் பொருளாதாரச் சுமையை சமாளிக்க முடியாமல் இப்பணிக்கு வந்தவர்களை, இது கூடுதல் சிரமத்திற்கு ஆளாக்கும்.
மளிகைச் சாமான்கள், மருந்துப் பொருட்கள், மின்னணுச் சாதனங்கள், இதர பொருட்கள் என இருசக்கர வாகனங்களில் வீடு தேடி வந்து விநியோகிப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
வாடிக்கையாளர்கள் என்பவர்கள் தனிப்பட்ட ஒரு பிரிவினரல்ல. உணவு தயாரிப்பவர்கள் முதல் அதனை வழங்கும் பணியாளர்கள்வரை, இப்பணியில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் அவர்களுக்குப் பரிச்சயமானவைதான். சாலை பாதுகாப்பு குறித்த அக்கறையும் அவர்களிடம் நிரம்பவே உண்டு. எனவே, வாடிக்கையாளர்களின் திருப்தி என்ற ஒற்றைப் பதில் இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காது.
இது ஒரு நிறுவனத்திற்கு எதிரான வாதம் அல்ல. மனித வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதொரு அணுகுமுறை குறித்த கவலையின் வெளிப்பாடு. நாளை ஸொமோட்டோ போல பல நிறுவனங்கள் இதேபோல உடனடி டெலிவரியில் இறங்கினால் தக்காளி சாஸ் சுவைக்கும்போதுகூட நமக்குள் வேறொரு ருசி தானாக ஊற்றெடுப்பதைத் தவிர்க்க முடியாது!