ஓ.பி.எஸ் உண்மையைக் கூறியிருக்கிறார்… உண்மையை மாற்றவோ திரையிட்டு மறைக்கவோ முடியாது – சசிகலா பேட்டி

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த சந்தியும் செய்யவில்லை என்று கூறினார். மேலும், சின்னம்மா (சசிகலா) மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், எனக்கு தெரிந்த உண்மைகளை கூறியிருக்கிறேன். சின்னம்மா மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்று கூறினார். ஓ.பி.எஸ்.சின் வாக்குமூலமும் பேட்டியும் அதிமுகவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்த சசிகலா சென்னை தியாகராய நகரில் இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் “ஓ.பி.எஸ் உண்மையை சொல்லியிருக்கிறார். கடவுளுக்கு தெரிந்த உண்மை இப்போது மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. உண்மையை மாற்றவோ, திரையிட்டு மறைக்கவோ முடியாது என்று கூறினார்.

சசிகலா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதை கேள்வி பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: உங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்துதான் பல பிரச்னைகள் வந்தது, ஆனால், நேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ஜெயலலிதா மரணத்தி எனக்கு சந்தேகமே இல்லை. மக்களின் அச்சத்தைக் கலைய வேண்டும் என்பதற்காகவே, இந்த விசாரணை வேண்டும் எனக் கேட்டேன் என்று கூறினார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சசிகலா: இது கடவுளுக்கு தெரிந்த உண்மை. நேற்று அந்த உண்மை மக்களுக்கும் தெரிந்திருக்கிறது. அதை நான் அப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன்.

கேள்வி: உங்கள் மீது குற்றச்சாட்டு இல்லை என்று உறுதியாக எடுத்துக்கொள்ளலாமா?

சசிகலா: நிச்சயமாக, எது உண்மையோ அது காலதாமதமாக வெளியே வரலாமே ஒழிய, உண்மையை யாருமே மாற்ற முடியாது. திரையிட்டு மறைக்கவும் முடியாது.

கேள்வி: தொண்டர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறீர்கள். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லையே? அதில் வருத்தம் இருக்கா?

சசிகலா: “எனக்கு வருத்தம் இல்லை. தலைவருடைய மறைவுக்கு பிறகு அம்மா (ஜெயலலிதா) தனியாகத்தான் இருந்தார்கள். அந்த சமயத்தில் நாங்கள் மட்டும்தான் கூட இருந்தோம். நாங்க அம்மா தலைமையில் ஆட்சியையும் அமைத்தோம். அதனால், எனக்கு இதில் முதலிலேயே அனுபவம் இருப்பதால், இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொண்டர்கள்தான் அதிமுகவின் ஆணி வேர். அது தலைவர் ஆரம்பித்த அன்றைக்கே அவர், கட்சி சட்டதிட்ட விதிகளிலேயே அதைத்தான் சொல்லி இருக்கிறார். ஏதோ பதவியில் இருக்கிறவர்கள் 100 பேருக்குள் ஒரு கருத்தை எடுத்தார்கள் என்றால், எங்களுடைய கிளைக்கழகத்தில் இருந்து மற்ற பொறுப்புகளில் உள்ள கழகத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இந்த இயக்கத்தில் நடக்கும். அதில் எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி: சின்னம்மா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். விசாரணைய ஆணையத்திலும் இது பதிந்திருக்கிறது இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சசிகலா: உண்மையை சொல்லி இருக்கிறார்.

கேள்வி: ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பு உங்கள் மீது நிறைய பேர் குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார்கள். ஆனால், நேற்று ஓ.பி.எஸ் சொன்ன பதில் எப்படி இருந்தது? ஏனென்றால், அவர் உங்கள் மீது எந்தவிதமான சந்தேகமும் இல்லை. உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சசிகலா: அந்த கமிஷன் ஆரம்பித்தபோதுகூட நானும் அப்போது இதில் உண்மை என்ன என்பது தெரியவேண்டும். பொதுமக்களுக்கும் தெரிய வேன்டிய விஷயம். அதனால், அந்த கமிஷன் நடப்பது நல்லதுதான் என்று ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லிக்கொண்டிருந்தேன். அது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

கேள்வி: நீண்ட நாட்களாக உங்கள் மீது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சசிகலா: மக்கள் சொன்னதை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அரசியலில் என்னைப் பிடிக்காமல் இருப்பவர்கள்கூட இந்த மாதிரி ஒரு சொல்ல ஆரம்பித்து வைத்திருக்கலாம். அப்படிதான் நான் நினைக்கிறேன். என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.