இலங்கையில் இது பஞ்ச நிலைமை இல்லை என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?



இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பஞ்ச நிலைமை என்று சொல்ல முடியாது என்றால் எதை பஞ்சம் என்று கூற முடியும் என்று  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளமைக்கு பிரதான காரணம் என்றால், அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதை சுருக்கமாக சொல்வது என்றால், செய்ய வேண்டிய காரியங்களை உரிய தருணத்திலே செய்யாமல், காலம் தாழ்த்தியது இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த நெருக்கடிக்கான பிரதான காரணம்.

ஆனால் அதனுடைய பின்னணி மிக நீண்டது என சொல்ல வேண்டும். சுதந்திரத்தின் பின்னர் இருந்தே இலங்கை கடைபிடித்த பொருளாதார கொள்கைகள் நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கவில்லை. அவ்வப்போது பதவிக்கு வருகின்ற அரசாங்கங்கள் அந்த கொள்கைகளை மாற்றிக் கொண்டே இருந்தன.

அரசாங்கமே அடிக்கடி தங்களுடைய கொள்கை பிரகடனங்களை மாற்றிக் கொண்டிருந்தது. ஆகவே கொள்கையிலே எந்தவிதமான நிலைத்த தன்மையும் இல்லை. செய்யக்கூடாத கொள்கைகளை, கொள்கை முடிவுகளை பிழையான நேரத்திலே எடுத்தமை இந்த நெருக்கடிக்கான பிரதான காரணமாக நான் பார்க்கின்றேன்.

1970 – 73 போன்ற மூன்று வருட காலப் பகுதியிலே இதே போன்றதொரு நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்த சூழ்நிலையிலேயே இந்த உணவுக்கான தட்டுப்பாடு, அரிசிக்கான தட்டுப்பாடு, எரிபொருளுக்கான தட்டுப்பாடு என பொதுவான உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்ட போது, அப்போதிருந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு சலுகை விலையிலே இந்த சங்கக் கடைகள் என்று சொல்லப்படுகின்ற கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை பங்கீட்டு அடிப்படையிலே வழங்கியதை காணக்கூடியதாக இருந்தது.

ஆகவே பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் தருவதாக இருந்தது. ஆனால் இப்போதைய சூழ்நிலையிலே அத்தகைய நிவாரணங்கள் எதையும் காண முடியவில்லை.

இந்த பொருளாதார நெருக்கடி நிச்சயமாக தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒன்று. இப்படியான ஒரு நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், பொதுவான சொல்லப்படுகின்ற காரணம். கோவிட் 19 காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டது. ஆகவே, இது அரசியல்வாதிகளுடைய செய்கைகளுக்கு, கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது. நாட்டில் எவராலும் தவிர்த்திருக்க முடியாது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இலங்கையை விட மோசமான நிலையிலே இருந்த பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகள், இந்த பிரச்சினையை மிக இலகுவாக கையாண்டு, தற்போது முன்னேறிக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதிலிருந்து மீண்டு வந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இப்போது ஏற்பட்டிருக்கின்ற இந்த ரஷ்ய – யுக்ரேன் நெருக்கடி காரணமாக பொருள் விலை அதிகரித்திருப்பது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் இலங்கையில் ஏற்பட்டிருப்பதை போல பொருளாதார நெருக்கடியும், சீரழிவும் வேறு எந்தநாட்டிலும் ஏற்பட்டிருப்பதாக தெரியவில்லை இந்த குறுகிய காலப் பகுதியிலே.

-பிபிசி தமிழ்-



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.