‘வலிமை‘ படத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டவரிடமே இழப்பீடு கோரும் ஹெச் வினோத் – வெளியான தகவல்

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளநிலையில், அப்படத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனிடம், இயக்குநர் ஹெச் வினோத், 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திர்த்தில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப பின், கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘வலிமை’ படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், படத்தை பார்த்த சிலர், ‘மெட்ரோ’ படத்தின் சாயலில் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ‘வலிமை’ திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், கடந்த 2016-ல் வெளியான தனது ‘மெட்ரோ’ படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

image

அந்த மனுவில், வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வதுபோல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிற மொழிகளில் ‘மெட்ரோ’ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.

இதனால் ‘வலிமை’ திரைப்படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயகிருஷ்ணன் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் இருவரும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

image

இதற்கிடையே, ‘வலிமை’ திரைப்படம் நாளை மறுதினம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால், அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஹெச் வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவானதுதான் ‘வலிமை’ படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள். மனுதாரர் குறிப்பிடும் உச்சக்காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. ‘மெட்ரோ’ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு. எந்த காப்புரிமையையும் மீறவில்லை. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் மெட்ரோ படத்தை ஒப்பிட்டு கூறப்படவில்லை.

image

இதனால், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளோம். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘வலிமை’ படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்நிலையில் தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, ‘மெட்ரோ‘ படத் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த பதில் மனுவை ஏற்ற நீதிபதி, ‘வலிமை’ படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஹெச் வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி 3-வது முறையாக இணைந்து ‘ஏகே 61’ படத்தை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.