புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தலை பாஜக சரியான நேரத்தில் நடத்தி வெற்றி பெற்றால் ஆம் ஆத்மி அரசியலிலிருந்து விலகும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லியில் மாநகராட்சி தேர்தலைச் சரியாக நடத்தி பாஜக வெற்றி பெற்றால் நாங்கள் அரசியலை விட்டு வெளியேறுவோம். உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்று பாஜக கூறுகிறது, ஆனால், சிறிய கட்சி மற்றும் சிறிய தேர்தலுக்கு பயப்படுகிறது. சரியான நேரத்தில் மாநகராட்சி தேர்தல் நடத்த பாஜகவுக்கு நான் தைரியம் தருகிறேன்” என்றார்.
பின்னர் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ தோல்வி பயத்தில் இன்று டெல்லி மாநகராட்சி தேர்தலை ஒத்திவைக்கிறார்கள். நாளை மாநிலங்கள் மற்றும் நாட்டின் தேர்தலை ஒத்திவைப்பார்கள் என்று கெஜ்ரிவால் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.