நேட்டோ தலைவர்களை சந்திக்கும் பொருட்டு ஐரோப்பா பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யா மீது மேலும் பல தடைகள் விதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு உக்கிரமாக முன்னேறி வரும் நிலையில், நேட்டோ தலைவர்களை சந்திக்க ஐரோப்பா பயணப்பட உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.
வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸ் செல்லவிருக்கும் ஜோ பைடன், ரஷ்யாவின் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பயணத் தடைகள் விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நேட்டோ தலைவர்களுடன் ஜோ பைடன் விவாதித்து முடிவெடுப்பார் என தெரிய வந்துள்ளது.
ஜி-7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்தே ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தடைவிதிக்க நடவடிக்கை முன்னெடுக்க உள்ளனர்.
மொத்தத்தில், 328 ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர பலம் பொருந்திய குழுக்கள் உட்பட, 400 பேர் குறிவைக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.
உக்ரைன் படையெடுப்புக்கு பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா கடந்த மாதம் விதித்துள்ளது.
மட்டுமின்றி, புடினுக்கு நெருக்கமான கொடீஸ்வரர்கள், பலம் பொருந்திய குழுக்கள் உள்ளிட்டவர்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளானார்கள்.
மட்டுமின்றி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுடன், வெளிநாட்டுகளில் உள்ள வங்கிகளில் இருந்து போர் உள்ளிட்ட செலவுகளுக்காக புடினால் சேவைகளை நாட முடியாமல் போனது.
மேலும், ரஷ்யாவின் 640 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பில் பாதியளவு முடக்கப்பட்டிருக்கும் அதே வேளையில், எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு மத்தியில் ஐரோப்பாவிற்கு தொடர்ந்து எரிபொருள் விற்பனை செய்வதன் மூலம் அதை ஈடுகட்ட ரஷ்யாவால் முடிந்தது என தெரிய வந்துள்ளது.