புவனேஸ்வர்:
நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் உள்ள நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலமாக, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.47 சதவிதமாகவும், மாநிலத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.96 சதவீதமாகவும் உள்ளது.
வேலைவாய்ப்புன்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா (25.7 சதவீதம்) உள்ளது. அதனைத் தொடர்ந்து 24.5 சதவீதத்துடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் 22.8 சதவீதத்துடன் மூன்றாமிடத்தில் உள்ளது. தமிழகம் 5.5 சதவீதத்துடன் 15வது இடத்தில் உள்ளது.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.