அல்வார்: நாளை மறுநாள் உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு வழக்கு ஒன்றில் நோட்டீஸ் அனுப்ப ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் மல்கேடாவில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பங்கேற்றார். அப்போது அவர், ‘பஜ்ரங்பாலி என்பது நாட்டுப்புற தெய்வம்; தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்’ என்று கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டோஹ்ரிகாட்டைச் சேர்ந்த நவல் கிஷோர் சர்மா என்பவர், யோகிக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத், பஜ்ரங்பாலியை வணங்கும் மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளதாக கூறியதாக குற்றம் சாட்டினார். அதையடுத்து யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு அல்வார் மாவட்ட கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது இவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. நாளை மறுநாள் (மார்ச் 25) யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.