இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் அளவை எட்டியுள்ளதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா முதன்முறையாக நாற்பதாயிரம் கோடி டாலர் என்னும் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மதிப்பில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 740 கோடி ரூபாயாகும். இந்தச் சாதனையை எட்டியதற்கு விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டுள்ளதற்கு 9 நாட்களுக்கு முன் இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்களுடன் மத்திய அரசின் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் இது கைகூடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளில் ஒரு பில்லியன் டாலர், ஒரு மாதத்தில் 33 பில்லியன் டாலர் என்னும் அளவில் ஏற்றுமதி இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முந்தைய நிதியாண்டில் 29 ஆயிரத்து 200 கோடி டாலர் மதிப்பில் இருந்த ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 37 விழுக்காடு அதிகரித்து 40,000 கோடி டாலராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.