2022 நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளதாகவும், விவசாயிகள், நெசவாளர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ), உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்த சாதனையை நிறைவு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
“இந்தியா 400 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்துள்ளது. அதுமட்டுமில்லாம, இந்தியா இந்த இலக்கை முதன்முறையாக எட்டியுள்ளது. இந்த வெற்றிக்காக விவசாயிகள், நெசவாளர்கள், எம்.எஸ்.எம்.இ., உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் வாழ்த்துகிறேன். நம்முடைய ஆத்ம நிர்பர் பாரத் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்” என்று மோடி புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிதியாண்டில் இந்தியா 400 பில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதியை எட்டியதன் முக்கியத்துவம் என்ன?
கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2019 நிதியாண்டில் எட்டப்பட்ட 330 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்குடன் ஒப்பிடுகையில், 400 பில்லியன் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி சாதனையானது ஏற்றுமதியில் 21 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோயின் முக்கிய அலைகளின்போது பூர்த்தி செய்யப்படாத தேவை அதிகரிப்பதே ஏற்றுமதியின் எழுச்சியைத் தூண்டும் முக்கிய காரணிகளில் ஒன்று என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொற்றுநோயின் பொருளாதார தாக்கத்திற்கு முடிவுகட்டும் வகையில் வளர்ந்த பொருளாதாரங்களின் விரிவாக்க பணவியல் கொள்கையும் இந்திய ஏற்றுமதிக்கான தேவையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு எந்தப் பகுதிகள் முக்கிய உந்துசக்தியாக இருந்துள்ளன?
இந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் பொறியியல் பொருட்கள் 49.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி 42.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 57.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 147.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இறக்குமதியில் என்ன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது?
கச்சா எண்ணெய், நிலக்கரி, தங்கம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றின் இறக்குமதியில் கூர்மையான வளர்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதிகள் கடுமையாக வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் சரக்கு இறக்குமதிகள் இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் 550 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரிப்பதிலும், முதல் 11 மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறையை 176 பில்லியன் டாலராகக் கொண்டு செல்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“