புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 2வது நாளாக நேற்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மக்களவையில் வழக்கத்திற்கு மாறாக சோனியா காந்தியே நேற்று அனைத்து எதிர்க்கட்சி எம்பி,க்களையும் வழி நடத்தினார். ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, காஸ் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை 2வது நாளாக நேற்றும் அதிகரித்தது. சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. மக்களவையில் அவை ஒத்திவைப்பு நோட்டீசை காங்கிரஸ் வழங்கிய நிலையில், வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அனைத்து எதிர்க்கட்சி எம்பி.க்களையும் நேற்று வழிநடத்தினார். கடந்த சில ஆண்டாக உடல் நலக்குறைவால் அரசியல் பிரசாரத்திலும், நாடாளுமன்றத்திலும் தீவிரமாக செயல்படாத சோனியா காந்தி, மக்களவையில் நேற்று அதிக செயல்திறனுடன் செயல்பட்டார். அவரது ஆலோசனையின் பேரில், பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பி.க்கள் கோஷமிட்டனர். குறிப்பாக காங்கிரஸ் எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு அமளி செய்தனர். அவர்களுடன் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், டிஆர்எஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்பி.க்கள் பதாகைகள் ஏந்தி ‘கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும்’ என ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். கடும் அமளி காரணமாக அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல், கேள்வி நேரத்தில், தேசிய மாநாட்டுக் கட்சி எம்பி ஹஸ்னனின் மசூதி பற்றி கேள்வி எழுப்ப அனுமதி வழங்கப்பட்டது. அப்போது அவரைப் பார்த்து அமருமாறு சோனியா அறிவுறுத்த, ஹஸ்னனும் கேள்வி கேட்காமல் அமர்ந்தார்., காங்கிரஸ் கூட்டணியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பி முகமது பஷீர், கேள்வி கேட்க சபாநாயகர் அனுமதி தந்தார். அப்போது அவர் சோனியா உத்தரவின் பேரில், அவர்கள் பட்டியலில் குறிப்பிட்டிருந்த கேள்விக்கு பதிலாக பெட்ரோல், காஸ் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பினார். கேள்வி நேரத்திற்குப் பிறகும் சோனியா தொடர்ந்து அவையில் இருந்தார். இதே போல், மாநிலங்களவையிலும் பெட்ரோல், காஸ் விலை உயர்வு விவகாரம் கடும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி எம்பிக்கள் விதி எண் 267ன் கீழ் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால், அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நோட்டீசை நிராகரித்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்தனர். இதன் காரணமாக அவை பிற்கபல் வரை ஒத்திவைக்கப்பட்டது.* நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம்பெட்ரோல், காஸ் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி, நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் காங்கிரஸ் எம்பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரசின் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘நியாயமில்லாத விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இந்த விலை உயர்வு மூலம் ஒன்றிய அரசு மக்கள் பணத்தில் ரூ.10,000 கோடி கொள்ளை அடிக்கிறது’’ என்றார்.* பள்ளிகளில் மீண்டும் மதிய உணவு வேண்டும்மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கி உள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் தொடங்க வேண்டும், கொரோனா சமயத்தில் குழந்தைகளுக்கு பருப்பு, கோதுமை மாவு உள்ளிட்ட உலர் உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால், சமைத்த உணவுகளுக்கு ஈடாக அவை இல்லை. எனவே, மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் தொடங்க வேண்டும்,’’ என்றார்.* ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடக்கணும்மக்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே, ‘‘5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்ந்துள்ளது. தேர்தல் மூலம் மட்டுமே காஸ் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். எனவே, ஒவ்வொரு மாதமும் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல்கள்தான் ஆளும் கட்சியை பிஸியாக வைத்திருக்கும், அதே வேளையில், எரிபொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் உறுதி செய்யும்,’’ என ஒன்றிய அரசை கிண்டலடித்தார்.