நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு முன்பாகவே ரூ.30 லட்சம் கோடியை தாண்டியது ஏற்றுமதி: மோடி பெருமிதம்

புதுடெல்லி: ரூ.30 லட்சம் கோடி  ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ரூ.30  லட்சம் கோடிக்கான (400 பில்லியன் டாலர்) சரக்குகளை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த இலக்கை எட்ட காரணமான விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு உற்பத்தியாளர்கள், ஏற்றமதியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தற்சார்பு திட்ட பயணத்தில் இது முக்கிய மைல்கல்,’ என்று கூறியுள்ளார். ஏற்றுமதியில் சாதனை படைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களை விட 9 நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா, இலக்கை எட்டியது தொடர்பான விவரங்களையும் பிரதமர் வெளியிட்டுள்ளார். அந்த தகவல்களின்படி பல்வேறு  மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒன்றிய அரசு கொண்டிருந்த நெருக்கமான தொடர்புகள், ஏற்றுமதியாளர்களின் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள்,தொழில்துறை அமைப்புகள் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளுடன் தொடர்ந்து நடத்திய ஆலோசனைகளின் வாயிலாக தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்ளில் பெட்ரோலிய பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஜினியரிங் உற்பத்தி பொருட்கள், தோல், காபி, பிளாஸ்டிக்குகள், ஆயத்த ஆடைகள், இறைச்சி, பால் பொருட்கள், கடல் உணவு, பாக்கு போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.