திருமலை: ஐதராபாத் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற பீகாரை சேர்ந்த 11 தொழிலாளர்கள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே போயாகூடா பகுதியில் மர குடோன் மற்றும் பழைய பொருட்கள் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கு கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுகிறது. இந்த குடோன்களில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 12 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். பணிகள் முடிந்த பிறகு அனைவரும் குடோனின் மாடியில் உள்ள ஒரு அறையில் வழக்கம்போல் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனே, குடோனில் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஐதராபாத் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் குடோனின் மாடியில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் யாரும் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு 11 தொழிலாளர்களை உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்டனர். ஒருவர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார்.குடோனில் இருந்து மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் இரும்பினால் செய்யப்பட்டிருந்தது. தீ விபத்து காரணமாக இரும்பு படிக்கட்டு சூடானதால் மாடியில் உள்ள அறையில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். இதனால், அவர்கள் மாடியில் இருந்து அனைவரும் கீழே குதித்துள்ளனர். ஆனால், 11 தொழிலாளர்களும் தீயில் சிக்கி உடல் கருகி ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்தனர். இதையடுத்து, போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 11 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். உடல்கள் கருகி உருகுலைந்து கிடப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் பெயர், விவரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2லட்சம் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலா ரூ.5 லட்சமும் அறிவித்து உள்ளார்.