சென்னை: திமுகவோடு நல்ல புரிதலோடு, ஐக்கியமாக மதிமுக இயங்கி வருகிற சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற விதத்தில் கட்சியில் இருந்து சென்றுள்ளவர்கள் செயல்பட்டதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் இன்று மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது: “இன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் 1,284 பேர் கலந்துகொன்டனர். இந்தக் கூட்டம் நடைபெறும் இந்த சமயத்தில், கட்சிக்குள் நீர்க்குமிழி போன்ற ஒரு பூசல் தோன்றியதுபோல ஒரு காட்சி தெரிந்தது. நான் அலட்சியப்படுத்தினேன். நான் யாரையும் இழக்க விரும்பவில்லை.
என் இருதயத்துள் வந்தவர்கள், அதை உடைத்து ரத்தம் கொட்டச் செய்துவிட்டு போவார்களே தவிர, நான் யாரையும் இதுவரை புண்படுத்திய அனுப்பியது கிடையாது. தொடர்ந்து திட்டமிட்டு ஒரு வருட காலமாகவே, எந்த கூட்டங்களுக்கும் வராதவர்கள், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எப்போதோ நீக்கியிருக்க முடியும். அப்படியிருந்தும் நான் பொறுமை காத்தேன்.
அவர்கள் மூன்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு வரவில்லை என்பதோடு, அக்டோபர் 20-ம் தேதி நான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வைத்திருந்தேன். அதற்கு 4 நாட்களுக்கு முன்னால் தனியாக ஓர் இடத்தில் பொங்கலூரில் இந்த ஐந்தாறு பேர் சேர்ந்து நான் நடத்தும் கூட்டத்துக்கு போகக்கூடாது என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அவர்களது பெயர்களை எல்லாம் இங்கு கூறி அவர்களுக்கு விளம்பரம் தேடித்தர நான் விரும்பவில்லை.
இந்தத் தேர்தலுக்கு முன்னர், அவர்கள் அனைவருமே அதிமுகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் எனக் கூறியவர்கள். கட்சி ஓர் உறுதியான முடிவெடுத்து, இந்துத்துவா வெறிபிடித்தக் கூட்டத்தை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது, இந்துத்துவ சக்திகளுக்கு இடமில்லை, இது தந்தை பெரியார், அண்ணாவின் மண், கருணாநிதியின் பகுதி என்பதால், ஒரு முடிவெடுத்து திமுகவுடன் உடன்பாடு வைத்துக் கொள்வது, அவர்களோடு இணைந்து செயலாற்றுவது என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், அதை கொள்கை ரீதியான முடிவென்று அறிவித்து, அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்பட்டது.
அதன்பின்னரும், ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் திமுகவுடன் உடன்பாடு வைத்து பல இடங்களிலே வெற்றி பெற்றிருக்கின்றோம். அதன்பிறகு தற்போது நடந்த உள்ளாட்சி, நகராட்சித் தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு வைத்து தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
எனவே, திமுகவோடு நல்ல புரிதலோடு, ஐக்கியமாக நாங்கள் இயங்கி வருகிற சந்தர்ப்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிற விதத்தில், இவர்கள் நாம் அங்கே போயிருந்தால் அதிக இடங்கள் கொடுத்திருப்பார்கள் என்றெல்லாம் கூட சிலரிடம் பேசி பார்த்தார்கள். ஆனால் அதற்கு யாரும் மசியவில்லை. எனவே, அப்படி கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், கட்சியின் ஒட்டுமொத்த முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியவர்கள், ஒரு நான்கைந்து பேர் தனியாக சென்று ஒரு கூட்டத்தை கூட்டினார்கள். சென்ற கூட்டத்துக்கு அவர்கள் வரவில்லை.
இதற்குமுன் நாங்கள் நடத்திய மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கும், காணொலிக் கூட்டத்திற்கும் வரவில்லை. இப்போது சிவகங்கைக்கு சென்று ஒரு ஐந்து பேர், மாவட்டம் எனக் கணக்கிட்டாலே 65 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை எப்போதோ நான் நீக்கியிருக்க முடியும். நான் தயவுதாட்சியம் பார்க்கிறவன். நம்மோடு இவ்வளவு காலம் பயணித்தார்கள் அல்லவா, ஆகையால் அவர்களை நாம் விட்டுவைப்போம் என்று நினைத்தேன்.
சிவகங்கை மாவட்டச் செயலாளரை நானே நேரில் அழைத்தேன். அவருடைய மனக்குறையைப் போக்குவதற்காக, ஆனால் அவர் எனக்கு எம்எல்ஏ சீட் இந்த முறை தரவில்லை என்றால் எப்போது நான் நிற்க போகிறேன் என்று கேட்டார். இந்தக் கட்சி ஆரம்பித்த பின்னர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவருக்கு இரண்டு முறை அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டு முறையும் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருந்த நிலையில், இவர் கேட்ட இடத்தை திமுகவால் கொடுக்க முடியாது.
ஆனால், இங்கு போட்டியிட வேண்டும் என அவர் கேட்டபோது, இந்தமுறை வாய்ப்பு இருக்காது, பொறுமையாக இருக்குமாறு கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அதோடு தவறான கருத்துகளை பேசி வந்தார்கள். நான் அதற்கெல்லாம் பதில்கூற விரும்பவில்லை. என்னோடு இத்தனை காலம் பயணித்தவர்கள், இப்போது இரண்டு வருட காலமாகவே எந்த பணிகளுக்கும் வருவதில்லை. எனவே இந்த சூழலில் மதிமுக இதுவரை நடத்திய பொதுக்குழுக் கூட்டங்களிலேயே இந்த கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்டங்கள் குறித்து பேசப்பட்டது. புதிதாக இரண்டு துணை பொதுச் செயலாளர்கள், ஒரு தணிக்கைக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. இந்தப் பொதுக்குழுவில் நல்ல தீர்மானங்கள், தமிழகத்தை பாதுகாக்க, திமுக அரசு முன்னெடுக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை வரவேற்றிருக்கிறோம், பாராட்டியிருக்கிறோம், போராடுவதற்கு தயாராக இருக்கிறோம். டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ”மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் திமுகவில் இருந்து மதிமுக பிரிந்தது. ஆனால், தனது மகனை கட்சிக் கொள்கைக்கு விரோதமாக துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். இதற்கு 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்” என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (விருதுநகர்), செங்குட்டுவன் (திருவள்ளூர்) ஆகியோர் நேற்று சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.