சென்னை: விருதுநகரில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தினகரன், சரத்குமார் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் பாலியல் வன்கொடுமை நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் தொடர்புடைய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததலிருந்து ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கம் மகளிருக்கு பாதுகாப்பில்லாத வகையில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆளுங்கட்சியினர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பதால் விசாரணையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது.
வேறு யாராவது இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விருதுநகர் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய மற்றவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகரில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கயவர்களின் இழிச்செயல் தமிழக மக்களின் நெஞ்சங்களை பதறச் செய்துள்ளது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன், 18 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், குற்றம் புரிந்த அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட்டு, ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு சிறையில் வைக்கப்பட வேண்டும்.
சுயமரியாதையுடன் வாழும் பெண்களை மறைமுகமாக புகைப்படம், வீடியோ எடுத்து, மானம், மரியாதையை குலைத்துவிடுவேன் என மிரட்டி, வன்புணர்வு செய்ய நினைக்கும் வக்கிர எண்ணம், மன்னிக்கமுடியாத பேராபத்து கொண்டது. பெண்ணை அவமானப்படுத்தி, அடிமைப்படுத்தும் கொடுமையான செயலுக்கு வழங்கப்படும் தண்டனையானது, இன்னொருவர் அச்செயல் புரிவதற்கு துணியாத அளவிற்கு அமைவது அவசியம்.
சமூகத்தில் இதுபோன்று நடைபெறும் எண்ணற்ற அவலங்களால் அவமானம் ஏற்படுமோ என்ற பயத்தால் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு, பலர் வேதனையில் வாடுவதை அறிவேன். வெளியில் தெரியவரும் ஒன்றிரண்டு குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டால் தான், வெளிவராத சம்பவங்களும், குற்றங்களும் தடுக்கப்பட்டு, சமூக ஒழுக்கம் சீர்குலையாமல் பாதுகாக்கப்படும்.
முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டம் குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை விட, இதுபோன்ற இழிச்செயலில் ஈடுபடும் தன் குடும்பத்தைச் சார்ந்த நபர்களை அக்குடும்பம் ஒதுக்கி வைப்பதிலும், அவமானப்படுத்துவதிலும் தான் உண்மையான தண்டனை அடங்கியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் எப்படி அவமானத்திற்கு பயந்து கற்பை இழந்திருக்கிறாளோ, அதுபோன்ற அவமானம் குற்றவாளிகளுக்கு ஏற்படும் போது, அதை காணும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் சுய ஒழுக்கத்தை உறுதி செய்வார்கள்.
விருதுநகர் இளம்பெண் பாதிக்கப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில், சமூக ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், எந்தவொரு குடும்பத்திலும் இனி இது நடக்கக்கூடாது எனில் அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர் இச்சம்பவத்தில் அலட்சியம் காட்டாமல், காலம் கடத்தாமல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.