சென்னை அம்பத்தூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தொழிலதிபர் மகனைக் காரில் கடத்திய கும்பலை போலீசார் ஆந்திராவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பாடி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் அத்திப்பட்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது மகன் ஆதர்ஷ் சுப்பிரமணி தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். செவ்வாய்கிழமை மாலை அலுவலகம் முடித்து காரில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை மற்றொரு காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல், கத்தி முனையில் அவரை தங்களது காரில் கடத்திச் சென்றது.
சிசிடிவியில் சிக்கிய காரின் பதிவு எண்ணை வைத்து, அது வாடகைக் கார் என்பதை கண்டுபிடித்த போலீசார், அதிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் பின் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே மடக்கினர்.
ஆதர்ஷ் சுப்பிமணியத்தை மீட்ட போலீசார், அவரை கடத்திச் சென்ற செந்தில்குமார், சிலம்பரசன், ஜீவன் பிரபு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் செந்தில்குமாரும் சரவணனும் ஒன்றாக ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக நிறுவனத்தை மூடியதும் தெரியவந்தது. அதன் பிறகு தனது பங்குத் தொகை ஒரு கோடி ரூபாயை கேட்டு செந்தில்குமார் சரவணனுடன் தகராறு செய்து வந்ததும் அதன் தொடர்ச்சியாகவே ஆதர்ஷ் சுப்பிரமணியத்தை கடத்தியதும் தெரியவந்தது.