திருவனந்தபுரம்: இந்தியன் கிராண்ட் பிரிக்சில் தமிழகத்தின் தமிழ் அரசு, ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 போட்டி நடந்தது. ஆண்கள், பெண்களுக்கான 16 பிரிவுகளில் போட்டி நடந்தன. மொத்தம் 125 பேர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு 10.66 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
மூன்று பிரிவுகளில் நடந்த 400 மீ., ஓட்டத்தின் ஒட்டுமொத்த முடிவில் தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ் (46.09 வினாடி) தங்கம் தட்டிச் சென்றார்.
400 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் 50.15 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மற்ற தமிழக வீரர்கள் பிரவீண் குமார் 4 வது இடம் பெற, தருண் அய்யாச்சாமி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழகத்தின் வெனிஸ்டர் 16.09 மீ., துாரம் தாண்டி, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
பிரியா அபாரம்
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் கர்நாடகாவின் பிரியா (2.37), பூவம்மா (52.44), கேரளாவின் ஜிஸ்னா (53.40) முதல் மூன்று இடம் பெற்றனர்.
400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா (58.55 வினாடி), 0.02 வினாடி நேரத்தில் பின் தங்கி வெள்ளி வென்றார்.
கேரளாவின் அனு (58.53) தங்கம் கைப்பற்றினார்.
‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தமிழக வீராங்கனை கார்த்திகா 13.08 மீ., தாண்டி, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார். பெண்கள் 100 மீ., ஓட்டத்தில் 11.79 வினாடி சிமி தங்கம் வென்றார்.ஒட்டுமொத்தமாக தமிழக அணி 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்கள் கைப்பற்றியது.
கமல்பிரீத் கலக்கல்
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் அசத்திய பஞ்சாப்பின் கமல்பிரீத் கவுர், 61.39 மீ., துரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.அவினாஷ் சாதனை
ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள்சேஸ் போட்டியில் மகாராஷ்டிராவின் அவினாஷ் சபிள், 8 நிமிடம், 16.21 வினாடி நேரத்தில் வந்து, தனது முந்தைய (2021ல், 8 நிமிடம், 18.12 வினாடி) சாதனையை, தகர்த்து புதிய தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.