சென்னை: அதிமுக ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும், அதைத் தொடர்ந்து கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டுகழக நிர்வாகிகள், நகர வார்டு கழகநிர்வாகிகள், மாவட்ட வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல்களும் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்நிலையில் முதல்கட்டமாக, ராணிப்பேட்டை, வேலூர் மாநகர் மற்றும் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் புறநகர் மற்றும் மாநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்குமற்றும் மேற்கு, நாமக்கல், ஈரோடுமாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, திருப்பூர், திருப்பூர்புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, கரூர், கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு, நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கட்சியின் அமைப்புத் தேர்தல் வரும் 27-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் நடைபெறும்.
இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விருப்பமனு விண்ணப்பக் கட்டணங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர் மற்றும்ஆணையாளர்களிடம் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
ஒன்றியக் கழகச் செயலாளர் பதவிக்கு ரூ.5 ஆயிரத்தை விருப்ப மனு கட்டணமாக செலுத்த வேண்டும். ஒன்றிய அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்டப்பிரதிநிதிகள் பதவிகளுக்கு ரூ.2ஆயிரம், நகரக் கழக செயலாளர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகரஅவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் மாவட்டப் பிரதிநிதிகள் பதவிகளுக்கு விருப்ப கட்டணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.
அதேபோல், பேரூராட்சிக் கழக செயலாளர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்டப் பிரதிநிதிகள் பதவிக்கு ரூ.1,000, பகுதிக் கழக செயலாளர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், பகுதிஅவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்டப் பிரதிநிதிகள் பதவிக்கு ரூ.2,500 விருப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.