உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்திய கன்னியாஸ்திரிகள்

கீவ் :

அன்னை தெரசாவின் ‘மிஷனரீஸ் ஆப் சேரிட்டிஸ்’ அமைப்பை சேர்ந்தவர்கள், கன்னியாஸ்திரிகளான ரோசலா நுதாங்கி (வயது 65), ஆன் பிரிடா (48). இவர்கள் இருவருமே மிசோரம் மாநிலத்தின் தலைநகரான அய்சால் பகுதியை சேர்ந்தவர்கள்.

இப்போது உக்ரைனில் இடைவிடாது போர் நடந்து வந்தாலும் தலைநகர் கீவ்வில் வீடற்ற 37 உக்ரைனியர்களையும், ஒரு கேரள மாணவியையும் கரிசனையுடன் கவனித்துக்கொண்டு மகோன்னதமான மக்கள் சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் போர், மற்றொரு பக்கம் உணவு பற்றாக்குறை ஆகியவற்றுக்கு மத்தியிலும் சேவையாற்றிக்கொண்டிருக்கிற இந்த 2 கன்னியாஸ்திரிகளும் அங்கிருந்து ஒரு பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயரச்சொல்லி அறிவுறுத்தப்பட்டபோதும் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

“நாங்கள் உக்ரைனை விட்டு வெளியேற மாட்டோம், எல்லா காலங்களிலும் தேவைப்படுவோருக்கும், வீடற்றவர்களுக்கும் சேவை செய்வது என்பது எங்களது முதன்மையான கடமைகளில் ஒன்றாகும்” என்று கன்னியாஸ்திரி ஆன் பிரிடா கூறியதாக மிசோரமில் உள்ள அவரது சகோதரர் ராபர்ட் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “நாங்கள் அவர்களை பற்றி கவலைப்படக்கூடாது என்று எனது அக்கா பிரிடா கூறினார். போரினால் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாலும் மகிழ்ச்சியாக இருப்பதாக அக்கா கூறுகிறார்” என்றார்.

கன்னியாஸ்திரி ரோசலா, 8 சகோதரிகளில் ஆறாவதாக பிறந்து 1991-ல் ரஷியாவுக்கு மிஷனரியாக அனுப்பப்பட்டவர். 10 ஆண்டுகள் மாஸ்கோவில் பணியாற்றி உள்ளார்.

ரோசலா பற்றி அவரது சகோதரர் மகள் சில்வீன் கூறும்போது, “எனது அத்தையும், பிரிடா சகோதரியும் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். ஆனால் உணவு பற்றாக்குறையின் விளிம்பில் உள்ளனர். அத்தையுடன் நான் திங்கட்கிழமையன்று தொலைபேசியில் பேசினேன்” என குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்களை ரகசியமாக பெற முடிந்தாலும், போர் மற்றும் குண்டுவெடிப்புகளால் பற்றாக்குறை பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தாகவும் சில்வீன் தெரிவித்தார்.

இந்த இரு கன்னியாஸ்திரிகளுடன் வேறு நாடுகளைச் சேர்ந்த 3 கன்னியாஸ்திரிகளும் இணைந்து குண்டுவெடிப்புகளுக்கும், துப்பாக்கிச்சூடுகளுக்கும், ஏவுகணை வீச்சுகளுக்கும் மத்தியிலும் மனித நேய சேவை ஆற்றி வருவது மிசோரம் மக்களை நெகிழ வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.