கீவ்: இரண்டாம் உலகப் போரில் உயிர்பிழைத்தவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர், போரிஸ் ரோமன்சென்கோ (96).இவர் இரண்டாம் உலகப் போரின்போது, கொடுங்கோலர் ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பியவர் ஆவார். பின்னர் இவர் உக்ரைன் நாட்டுக்குத் திரும்பி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் அவரது பேத்தி யூலியா கூறியதாவது:
கடந்த 18-ம் தேதி, கார்கிவ் நகரில் சால்டிவ்கா குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அறிந்தேன். அங்கு வசித்து வரும் என் தாத்தா பற்றி ஏதாவது தெரியுமா என்று அங்கிருந்த எனது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் தாத்தாவின் எரியும் வீட்டை படம் எடுத்து அனுப்பினர். அத்துடன் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இதைப்பற்றி நான் அறிந்தேன். எனவே என்னால் அங்குஉடனடியாக செல்ல முடியவில்லை. அவர் இறந்தது எனக்குபெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்று சோகத்துடன் குறிப்பிட்டார்.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், பீனமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். அவர் கார்கிவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய ராணுவம் வீசிய வெடிகுண்டு இவரது வீட்டில்விழுந்து இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
1926-ல் போன்டாரி என்ற பகுதியில் பிறந்த போரிஸ், 2-ம் உலகப் போரில் பங்கேற்றார். 1942-ல் டார்ட்மண்ட் பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட போரிஸ், அங்கு ஹிட்லரின் 4 வதை முகாம்களில் சிக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பி உக்ரைன் திரும்பினார்.
இந்நிலையில் அவரது மறைவு,கார்கிவ் பகுதியிலுள்ள பலருக்குபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமைச்சகங்களின் ட்விட்டர் பக்கத்தில், “ஹிட்லரால் செய்ய முடியாததை எல்லாம் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு செய்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.