கதர் வாரியத்தில் பாரம்பரிய அரிசி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை: கைத்தறித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: கதர் வாரியம் தயாரித்துள்ள புதிய பொருட்கள் விற்பனை மற்றும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் ஆகியவற்றை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ‘காதி பராம்பரியம்’ என்றபெயரில் தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா,மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி மற்றும் பூங்கார் அரிசி வகைகளையும், ‘காதி நியூ லைப்’ என்றபெயரில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், ‘காதி ஃபிரஷ்’ என்ற பெயரில் நறுமணங்களைக் கொண்ட அகர்பத்திகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகளை தயாரித்துள்ளது.

இப்புதிய பொருட்கள் அறிமுகவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினர்.

பின்னர், கைத்தறித் துறை ஆணையரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தையும் அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நெசவாளர்கள் வேலைவாய்ப்பு, கூலி உயர்வு உள்ளிட்ட தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும் வேண்டி இந்தகுறைதீர்ப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. https://gdp.tn.gov.in/dhltx என்ற இணையதளம் மூலமாகவும், [email protected] என்ற இ-மெயில் மூலமாகவும், 044-25340518 என்ற தொலைபேசி எண்மூலமாக தொடர்பு கொண்டு நெசவாளர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.