சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா

7 நாட்கள்… 5 இடங்களில் திரையிடல் எனச் சிறப்பாக நடைபெற்ற 10வது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழா நிறைவு பெற்றது. பெரியார் சுயமரியாதை ஊடகம், Dot School of Design, கிறிஸ்தவப் பெண்கள் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என பல நிறுவனங்களுடன் இணைந்து மறுபக்கம் அமைப்பு இவ்விழாவை நடத்தியது. பத்து ஆண்டுகளாக இவ்விழாவை ஒருங்கிணைத்து மிகச்சிறப்பாக நடத்தி சாதனை புரிந்துள்ளார் ஆவணப்பட இயக்குநர் அமுதன். லாப நோக்கமில்லாமல், பெரிய நிதி ஆதாரம் இல்லாமல், சுதந்தர உணர்வுடன்தான் இந்த விழா நடைபெற்றது. வலதுசாரி மற்றும் வெறுப்பு அரசியல் தவிர்த்து எப்போதுமே ஒரு வானவில் அரசியல் கூட்டணியைப் போற்றும் விதமாகவே படங்களின் தேர்வுகள் இருந்தது.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆவணப்பட முயற்சிகளைப் பாராட்டும், ஆதரிக்கும், வளர்க்கும் நோக்கத்துடனும் தமிழ்நாட்டுக்கு வெளியே எடுக்கப்படும் படங்களை உள்ளூரில் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடனும், ஆவணப்படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடனும் மிகவும் கவனத்துடன் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து வழங்குப்பட்டது.

ஒரு சர்வதேசத் திரைப்படவிழாவைப் போல கணிசமான எண்ணிக்கையில் படங்கள், தெளிவான நிகழ்ச்சி நிரல், விழா நூல், இயக்குனர்களின் பங்கேற்பு, கலந்துரையாடல், முறையான அறிமுகம் என பல அம்சங்களை இவ்விழா கொண்டிருந்தது.

Chennai Docu & Short film festival

பத்தாண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில், இது வரை நூற்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் படங்களைக் கண்டுகளித்துள்ளனர். இவர்களுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல்கள், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நட்புகள், இணைந்த நடவடிக்கைகள் கணக்கில் அடங்கா.

கலைப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, அரசியற்பூர்வமான, சமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட, இனியும் தொடர்ந்து நடத்தப்படவுள்ள இந்த சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்படவிழா படைப்பாளிகளுக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வரம்.

ஆவணப்பட இயக்குநர் அமுதன்

இந்த விழாவில் ஆவணம் மற்றும் குறும்படங்கள் என 80 படங்கள் திரையிடப்பட்டது. இந்தியா மற்றும் பன்னாட்டு ஆவணப்படத்திற்கான தேர்வுக்குழுவில் செஜோ சிங், மீரா செளத்ரி, சப்யாசாச்சி பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர். குறும்படங்களுக்கான தேர்வுக்குழுவில் தமயந்தி, லூயி மாத்யூ, பிரதாப் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்தியப் பிரிவுக்கு (மட்டும்) நடந்த போட்டியில் பரிசுக்கான சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் ஆவணப்படங்களுக்கு சொர்ணவேல், ஸ்மிரிதி நவேதியா மற்றும் பாத்திமா ஆகியோரும் குறும்படங்களுக்கு அருண் குப்தா, சுமா ஜோசன் மற்றும் சந்தோஷ் ராம் ஆகியோரும் இடம் பெற்றனர்.

பன்னாட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களின் ஆதரவுடன், தேர்வுக்குழுவினர், நடுவர் குழுவினர், நிதி அளித்தோர், இணைந்து நடத்தியோர், களப்பணியாளர்கள், பார்வையாளர்கள், ஊடகத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இவ்விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

A Bid for Bengal

விழா நிறைவு நாளில் ‘சுப்ரதீப் சக்ரவர்த்தி விருது’ [சிறந்த இந்திய ஆவணப்படம்] ‘எ பிட் பார் பெங்கால்’ எனும் ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டது.

விருதுக்குறிய ஆவணப்படத்தை தேர்வு செய்த நடுவர்கள் இயக்குநர் சொர்ணவேல், இயக்குநர் ஸ்மிரிதி நிவேதிதா மற்றும் பேராசிரியர் பாத்திமா ஆகியோருக்கு பாராட்டு.

இயக்குநர் சுப்ரதீப் தீப் உருவாக்கிய ஆவணப்படத்தை மோடி ஆட்சிக்கு வந்ததும் தடை செய்தார். இதன் காரணமாக மன அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு 40 வயது கூட அடையாத இளைஞர் சுப்ரதீப் மரணமடைந்தார்.

சுப்ரதீப் சக்ரவர்த்தி பெயரில் விருது மற்றும் 50,000 ரூபாய் பரிசுத்தொகையை வழங்கிச் சிறப்பித்தார் விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் அமுதன்.

பாஜக அரசின் அதிரடி நடவடிக்கையால் உயிரிழந்த இயக்குநர் சுப்ரதீப் சக்ரவர்த்தி பெயரில் வழங்கப்பட்ட விருதை, மேற்கு வங்காளத்தில் பாஜக நடத்தி வரும் அராஜக திருவிளையாடல்களை காட்சிக்கு காட்சி ஆவண்ப்படுத்திய ‘எ பிட் பார் பெங்கால்’ படத்துக்கு வழங்கியது மிகப்பொருத்தம்.

‘எ பிட் பார் பெங்கால்’ ஆவணப்படத்தை தமிழில் சப்-டைட்டில் போட்டு தமிழ்நாடு முழுவதும் திரையிட வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக எத்தகைய தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகிறது என்பதை ஆவணப்படுத்தி உள்ளது பிட் பார் பெங்கால்.

இந்துத்துவா சக்திகள் எத்தகைய அராஜகங்களை நிகழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது என்பதை வரலாற்று சம்பவங்களை தொகுத்து வழங்கி எச்சரிக்கை செய்திருக்கும் ஆவணப்படம் பிட் பார் பெங்கால்.

Bid for Bengal | Dir: Dwaipayan Banerjee & Kasturi Basu | 70.30 min | Documentary

சிறந்த இந்திய குறும்படத்திற்கு,மறைந்த பன்முகக் கலைஞர் அருண்மொழி அவர்களது பெயரில் ஒரு விருதை உருவாக்கி 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர் அருண்மொழி விருது பெற்ற குறும்படம் கிரசண்ட். பத்தாவது சென்னை பன்னாட்டு ஆவணம் மற்றும் குறும்பட விழாவில் மூன்று இடங்களில் திரையிடப்பட்ட படம் இது ஒன்றே.

எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் திரையிடல் நடைபெற்ற போது, 500க்கும் மேற்பட்ட மாணவர்களின் வருகையால் அரங்கு நிறைந்தது.

Crescent

கிரசன்ட் எனும் மலையாள குறும்படம் திரையிடப்பட்டு,அதன் பின்னர் மிகச்சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றது. படத்தின் இயக்குனர் பாசில் ரசாக் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையுடன் பதிலளித்தார்.

நிறைவாக இயக்குனர் அமுதன் ‘ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும்’ என்பதை மிக எளிமையாக விளக்கி திரைப்பட ரசனை குறித்து விளக்கிப் பேசினார். அதுமட்டுமல்ல… கிரசன்ட் குறும்படம் எத்தகைய அரசியல் மற்றும் சமூகப் பார்வையை கொண்டிருக்கிறது என்பதையும் மிக அழகாக எடுத்துக் காட்டி பேசி பாராட்டினார்.

கேரளா கல்வியில் முதன்மையாக திகழும் மாநிலம். அந்த மாநிலத்தில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த பெண் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி பெற விரும்புகிறாள். ஆனால் அவளது தந்தை அவளது திருமணத்திற்கு வரன் பார்த்து திருமணத்தை நடத்தி முடிக்க மும்முரம் காட்டுகிறார். ஆணாதிக்கத்தின் மொத்த உருவமாக திகழும் தந்தை அவளது தாயை அடித்து கையை உடைத்திருப்பது இக்குறும்படத்தில் காட்சி மொழியில் விவரிக்கப்பட்டது சிறப்பு. தாயின் துணையோடு அவள் உயர் கல்வியை பெற முடிந்ததா?

சிறப்பான குறியீடுகள் மூலம் இறுதிக்காட்சியை உறுதியாக உருவாக்கிய இயக்குநர் பாசில் ரசாக் அவர்களுக்கு பாராட்டு. படத்தை நேரடி ஒலிப்பதிவு மூலம் உருவாக்கியது இக்குறும்படத்தின் ஆகச்சிறந்த பலம்.

Crescent | Dir: Fazil Razak | 19.04 min | Short fiction | India.

லாங்கிங் ஆவணப்படம்- இயக்கம் பானி சிங்

இந்தியா-பாக்கிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் இந்திய ஹாக்கி குழுவில் ஒருங்கிணைந்து விளையாடிய வீரர்கள் நந்தி சிங்,கேசவ் தத்,ஷாருக் முகம்மது.

1948 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. அப்போது நந்தி சிங்,கேசவ் தத் இந்திய அணியிலும், ஷாருக் முகம்மது பாக்கிஸ்தான் அணியிலும் பிரிந்து விளையாடிய வரலாற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பானி சிங். நந்தி சிங் மகள்தான் பானி சிங்.

எண்பது வயதைக்கடந்த மூன்று முதியவர்களின் நட்பை சொல்லிய விதத்தில் இயக்குநர் பானி சிங் தனித்துவமான திரை மொழியை கையாண்டிருக்கிறார்.

Longing

‘தன் தந்தையை பற்றி ஒரு ஆவணப்படம் உருவாக்க வேண்டும்’ என்ற பயணத்தில் முதியவர்களின் எல்லை கடந்த நட்பை கண்டடைகிறார்.

90 வயதில் சக்கர நாற்காலியில் வலம் வரும் ஷாருக் முகம்மது தனது நண்பர்களோடு இளைமைக்காலத்தில் எடுத்த படத்தைக்கண்டதும் குழந்தை போல் முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்த காட்சி என் வாழ்நாள் முழுக்க பயணிக்கும்.

இயக்குநர் பானி சிங் முறைப்படி விசா பெற்று பாகிஸ்தானில் நுழைந்து ரகசியமாக திட்டமிட்டு லாகூர் நகரத்தின் எழில் மிகு தோற்றத்தை பதிவு செய்துள்ளார். தந்தை வாழ்ந்த இல்லம்,படித்த கல்லூரி என அனைத்தையும் பதிவு செய்து சக்கர நாற்காலியில் வலம் வரும் தனது தந்தைக்கு போட்டுக்காட்டுகிறார்.

பக்க வாதம் வந்து பேச முடியாத நிலையில் புதிய மொழியில் பேசுகிறார் நந்தி சிங். பார்வையாளர்கள் அனைவரும் அந்த மொழியை உணர்ந்தார்கள். ஒரு திரைப்படத்துக்கு உரிய அற்புதமான திரைக்கதையை சுமந்து பயணிக்கிறது ‘லாங்கிங்’.

Longing | Dir: Bani Singh | 89.42 min | Documentary | India

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.