பெங்களூரு-விபத்துகளில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக, கர்நாடக சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது. ”காப்பீடு மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இழப்பீடு பெற்று கொள்ள வாய்ப்புள்ளது. அனைத்து விபத்துகளுக்கும் அரசு நிவாரண நிதி தர முடியுமா,” என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி வினா எழுப்பினார்.சட்டசபையில் பூஜ்ய வேளையில் நடந்த விவாதம்:காங்கிரஸ் – சிவானந்த பாட்டீல்: ராமேஸ்வரத்துக்கு, 16ல் காரில் சென்று கொண்டிருந்த போது கூட்லிகியில் நடந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர். அவர்களுக்கு இதுவரை எந்த விதமான நிவாரண நிதியும் வழங்கவில்லை.ஆனால், பாவகடாவில் 19ல் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. எனவே கூட்லிகியில் இறந்தவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.ம.ஜ.த., – லிங்கேஸ்: பேலுாரில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் மோதி ஐந்து மாணவர்கள் இறந்தனர். அவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு: அதிகாரிகளின் முதல் கட்ட தகவல்படி, அரசு பஸ் ஓட்டுநர் தவறு செய்யவில்லை. மாணவர்கள் பயணித்த கார் தான், வலது புறம், இடது புறம் என சென்று பஸ் மீது மோதியுள்ளது.சிவானந்த பாட்டீல்: சாலை பாதுகாப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 480 கோடி ரூபாயில், 10 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதி 470 கோடி ரூபாய் அப்படியே உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது. அந்த பணத்தை கொண்டு நிவாரண நிதி வழங்கலாம்.சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி: எதிர்பாராத விதமாக நடக்கும் சாலை விபத்து, தீ விபத்துகளில் பலர் இறக்கின்றனர். எப்படி இறந்தாலும், இறப்பு என்பது துக்கம் தான். நிவாரண நிதி வழங்குவதில் அரசு ஒரு கொள்கை கொண்டு வர வேண்டும்.சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி: விபத்தில் இறப்பவர்கள், காப்பீடு மூலமும்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இழப்பீடு பெற்று கொள்ள வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தெரியாதவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு நிவாரண நிதி வழங்குகிறது.அதற்காக எந்த விபத்து நடந்தாலும், அரசு நிவாரண நிதி தர முடியுமா. அப்படி என்றால் காப்பீடு முறை எதற்கு உள்ளது. இப்படியே தொடர்ந்தால் ஒரு முடிவே இருக்காது.அப்போது, சிவானந்த பாட்டீலுக்கும், மாதுசாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. ஒருவர் மீது மற்றொருவர் ஒருமையில் பேசி கொண்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினருக்கு இடையே அமளி நிலவியது.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா: ஏன் இவ்வளவு கோபம் அடைகிறீர்கள். நிவாரண நிதி கொடுக்க முடியும் என்றால், முடியும் என்று கூறுங்கள். இல்லை என்றால் முடியாது என்று கூறுங்கள். கடந்த 19ல் நடந்த விபத்தில் நிவாரண நிதி கொடுத்து, 16ல் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி கொடுக்காதது தவறு தானே. ஏன் இந்த பாரபட்சம்?இறந்தவர்கள் ஏழைகள், மாணவர்கள். அவர்களுக்கும் நிவாரண நிதி கொடுங்கள்.அமைச்சர் ஸ்ரீராமுலு: நிவாரண நிதி கொடுப்பது குறித்து பரிசீலித்து தீர்மானிக்கப்படும்.சித்தராமையா: பரிசீலிப்பது எதற்கு… ஒரு விபத்தில் இறந்தவர்களுக்கு கொடுத்த பின், மற்றொரு விபத்தில் இறந்தவர்ளுக்கும் கொடுக்க வேண்டும்.ம.ஜ.த., – குமாரசாமி: சில சம்பவங்களில் மனிதாபிமான அடிப்படையில் அரசு நிவாரண நிதி தருவது காலம் காலமாக நடந்து வருகிறது. ஆனால் அனைத்து விபத்துகளுக்கும் நிவாரண நிதி தர வேண்டுமெனில் அதற்கு ஒரு எல்லையே இருக்காது.இறந்தவர்களின் பின்னணி, ஏழ்மை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. நான் முதல்வராக இருந்த போது சில விபத்துகளுக்கு வழங்கியுள்ளேன். அனைத்திற்கும் வழங்க அரசுக்கு கஷ்டம் ஏற்படும்.விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி: இந்த விஷயத்தில் அரசு ஒரு நிலையான கொள்கை உருவாக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement