தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல – பிடிஆர்; சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

Assembly highlights; PTR says Tamilnadu not a poor state: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று பட்ஜெட் மீதான கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். இதேபோல் வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலுரை அளித்தார்.

தமிழகம் ஏழை மாநிலம் அல்ல

பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கிய பதிலுரை…

ஏழை எளிய மக்களுக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம். தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான உரிமை பெற்று தரப்படும்.

அனைத்து திட்டங்களிலும் பெரும் பங்கு ஏழைகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது. இருளர் உள்ளிட்ட பழங்குடியினருக்கு 1000 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 50 கோடி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ. 4,848 கோடி, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்களுக்கு ரூ. 4,816 கோடி, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ. 2,800 கோடி, நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 480 கோடி உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 350 கோடி சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு அறிக்கை மே மாதத்திற்குள் குழுவால் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்திக்கடவு திட்டம் 93 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,902.71 கோடி இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.

நிதி துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் செய்யப்படும்.

காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் ரூ.1000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. மற்றும் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

பொருளாதார நிபுணர்கள் குழு துறை வாரியாக கலந்து ஆலோசித்து எங்களுக்கு உதவி செய்கிறார்கள். பல்வேறு அறிவுரைகளையும் வழங்குகின்றன. இல்லம் தேடி கல்வி திட்டம், குறு-சிறு நடுத்தர தொழில்களுக்கும் நிபுணர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் அரசிடமிருந்து ஒரு ரூபாய் வாங்கவில்லை. போக்குவரத்து போன்ற இதர விஷயங்களுக்கும் பணம் வாங்கியது கிடையாது.

கருணாநிதி தலைமையிலான ஆட்சி முடியும்போது தமிழகத்தின் மொத்த கடன் தொகை 17.33 சதவீதம். ஜெயலலிதா ஆட்சிக்கு பிறகு 15.55 சதவிகிதம் வரை குறைந்தது. ஆனால், கொரோனாவுக்கு முன்னதாகவே 22 சதவவீதம் வரை உயர்த்தியுள்ளனர். கொரோனாவுக்கு பிறகு 25.84 சதவீமாக உள்ளது. இது படிப்படியாக குறைக்கப்படும்.

நாம் ஏழை மாநிலம் இல்லை, வளர்ந்த மாநிலம். நமது இளைஞர்களுக்கு இலவச பேருந்து சலுகை கொடுத்தால் போதாது, அவர்களுக்கு வேலை தேவை. உலகம் முழுவதும் பயணிக்க வேண்டும். ஏழை மாநிலத்தில் இளைஞர்கள் 52 சதவீதம் பேர் கல்லூரியில் சேர மாட்டார்கள். 90 சதவீதம் குடும்பத்தினர் செல்போன் வைத்துள்ளார்கள். 75 சதவீத குடும்பத்தினர் சொந்த வீடுகளில் உள்ளார்கள். 75 சதவீதத்தில் 14 சதவீதம் பேர் தான் அரசால் கட்டப்பட்ட வீடுகளில் உள்ளார்கள். 66 சதவீதம் பேரிடம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இது வளர்ந்த மாநிலம்.

தமிழ்நாட்டின் வருமானம் அதிகரித்தது எப்படி?

தமிழ்நாடு நிதியை பொறுத்தவரை எங்களுக்கு சில சவால்கள் உள்ளன. ஜிஎஸ்டி வந்த பின் தமிழ்நாட்டின் நிதியை சரி செய்வது கடினம் ஆகியுள்ளது. ஒன்றிய அரசு செஸ் சப் சார்ஜை அதிகரித்துள்ளனர். அங்கிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கொடுக்கப்படும் நிதியும் அவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்.

இதனால் கடுமையான கஷ்டம் நிலவி வருகிறது. அடுத்தடுத்து நிதி குழுக்கள் 14, 15 ஆகியவை நிதி ஒதுக்கீடு தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் நமக்கு இருக்கும் தலையாய பிரச்சனை நிதி இல்லை. நாம் பணக்கார மாநிலம். நமக்கு கொடுத்தால் கொடுக்கட்டும். இல்லையென்றால் நாம் சமாளித்துக்கொள்வோம். நம்மிடம் முதலீடு செய்ய வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் நமக்கு எப்படியும் நிதி வந்துவிடும்.

ஆளுநர் சட்டங்களை ஏற்க மறுக்கிறார்

ஆனால் இதற்கு மேல் பல்வேறு கடினமான பிரச்சனைகள் 2 நமக்கு உள்ளது. முதல் பிரச்சனை மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் எப்போதெல்லாம் முடிவுகளை எடுக்கிறோமோ, மக்கள் தேர்வு செய்த கொள்கைக்கு ஏற்றபடி எப்போதெல்லாம் நாம் சட்டங்களை ஏற்றுகிறோமோ அப்போதெல்லாம் அதை ஆளுநர் ஏற்பதில்லை.

19 சட்ட மசோதாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளது. இதனால் அரசாணை வெளியிட முடியவில்லை. பல சட்டங்கள் கவர்னரும், ஜனாதிபதியும் கையெழுத்திடாமல் நிலுவையில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியாத நிலை உள்ளது.

இதையும் படியுங்கள்: பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியா வந்த இலங்கை தமிழர்கள்; அகதி அந்தஸ்து வழங்கப்படுமா?

நாம் எதையாவது சரியாக செய்தால் அதையும் தடுக்கிறார்கள். சட்டத்தை இயற்ற முடியாது என்றால் ஏன் சட்ட மன்றம். இரண்டாவது விஷயம், நான் கடந்த 10 மாதங்களில் சுமார் 3000 கோப்புகளை ஆராய்ந்து இருப்பேன். அதில் தெளிவாக தெரிகிறது. சட்ட துறையின் கடமை என்ன, ஆட்சி துறையின் கடமை என்ன என்று தெளிவாக உள்ளது. ஆனால் இதற்கான வேறுபாடு அப்படியே அழிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் கோர்ட்டுக்கு ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அப்போதுதான் இன்னும் ஆக்கபூர்வமாக, வேகமாக திறனுடன் ஆட்சியை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

விவசாயிகள் வங்கியில் கடன் கேட்காத நிலை உருவாகும்

வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். மேலும் கடன் கேட்டு விவசாயிகள் வங்கி வாயிலில் நிற்காத நிலை ஏற்படும். தமிழக மூன்று தொலைநோக்கு திட்டங்களை அறிவித்துள்ளது. இதன்மூலம் நெல், கரும்பு, பருத்தி, தேங்காய் போன்ற பொருட்களின் உற்பத்தி லாபகரமானதாக மாற்றப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலம்

பட்ஜெட்க்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர்கள் சிறப்பாக தாக்கல் செய்தனர். வரும் ஆண்டுகளிலும் இது தொடரும் என நம்புகிறேன். இலங்கைத் தமிழர்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஏராளமானோர் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு விரைவில் விடிவுகாலத்தை ஏற்படுத்தி தரும். ஈழத் தமிழர்கள் பிரச்சினையை சட்டரீதியாக கையாளுவது குறித்து மத்திய அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு துபாய் பயணம் உதவும் என்று கூறினார்.

நிலம் கையப்படுத்துதல் – அமைச்சர் விளக்கம்

பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய, தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஒசூர் அருகே ஏற்கனவே 3 சிப்காட்கள் உள்ள நிலையில் 4-வது சிப்காட் அமைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் 5,000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பது அரசின் அவசியமாக இருப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழில் பூங்கா அமைக்க விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக நிலத்தை கைப்பற்றுவது அரசின் நோக்கமல்ல. விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கொடுக்க தொழில்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

அதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நேரிட்டது. சில நிமிடங்களில் சட்டசபையில் இருந்து எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.