உயிரைக் குடிக்கும் காற்று மாசு!

உலக அளவில் காற்று மாசு அதிகமாக உள்ள 100 நகரங்களில், 63 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் பூமியில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2021ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டபோது கூறப்பட்ட தகவல்தான் இது.

காற்று மாசுவின் ஆபத்து

காற்று மாசு காரணமாக நமது நாட்டில் 16.7 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அதுவும் ஒரே ஆண்டில்! இது 2019ஆம் ஆண்டு கணக்கு! இது ஏதோ காற்றுவாக்கில் வந்த தகவல் அல்ல. ஒன்றிய அரசின் அமைப்பான ஐ.சி.எம்.ஆரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்!

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, காற்று மாசுவினால் ஏற்படும் உடல் உபாதைகளால் இந்தியாவில் நிமிடத்துக்கு மூன்று பேர் உயிரிழக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. நம் நாட்டில் காற்று மாசு குறைவான நகரமாக, தமிழ்நாட்டின் அரியலுார் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதை நினைத்து நாம் பெருமைப்பட முடியாது. ஏனென்றால், இங்கு பதிவான காற்று மாசின் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்புப் பரிந்துரையைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

ஆக, பிற இந்திய நகரங்களில் இதவிட அதிகமாக காற்று மாசு உள்ளதே என வருந்தத்தான் முடியும்.

காற்று மாசு எப்படி ஏற்படுகிறது?

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலை கழிவுகள், கட்டுமானத்துறை ஆகியவை, காற்று மாசு ஏற்பட முக்கியக் காரணம். வாகனங்களின் புகை இன்னொரு பிரதான காரணம்.

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் டில்லியும் அதைச் சுற்றியிருக்கும் பல நகரங்களும் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன. இங்கு மற்ற காரணங்களோடு, அறுவடைக்குப் பின் வைக்கோல்கள் எரிக்கப்படுவதும் காற்று மாசு ஏற்படக் காரணமாகிறது எனத் தெரியவந்துள்ளது.

சமாளிக்கும் அரசு

2020இல் ஐ.க்யூ.ஏர் நிறுவனத்தின் காற்று மாசு தரப்பட்டியல் வெளியானபோதும் அதில் இந்திய நகரங்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது ஒன்றிய அரசு, ‘இது பூமியிலிருந்து அளவிடப்படுவது இல்லை. செயற்கைக்கோள் வாயிலாக அளவிடப்படுகிறது. ஆகவே, இது துல்லியமானது அல்ல’ என சமாளித்தது.

ஆனால் ஐ.க்யூ.ஏர். நிறுவனம், ‘மாசு அளவுகள் அனைத்தும் பூமியில் உள்ள, ‘சென்சார்’கள் வாயிலாக அளவிடப்படுகின்றன. தவிர பாதிக்கும் மேற்பட்ட அளவிடும் பணிகள், அரசு நிறுவனங்கள் வாயிலாகவே நடக்கின்றன’ எனத் தெளிவுபடுத்தியது.

காற்று மாசுபாடு

பி.எம்.2.5 என்பது காற்றில் உள்ள 2.5 மைக்ரோமீட்டர் விட்டம் கொண்ட நுண்துகள்கள் ஆகும். பி.எம்.10 என்பது 10 மைக்ரோமீட்டர் என்றெல்லாம் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அந்த அறிவியல் ரீதியான கணக்கீடுகளை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

உலகுக்கு அவர்கள் அறிவிப்பது என்னவென்றால், இந்த நுண்ணிய காற்று மாசுகள், மனிதரின் நுரையீரலிலும் ரத்த ஓட்டத்திலும் ஆழமாக ஊடுருவிச் சென்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான்.

பாதிக்கப்படுபவர் யார்?

வழக்கம்போல, காற்று மாசுவினால் பாதிக்கப்படுபவர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், “மத்திய, குறைவான வருமானம் கொண்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அந்நாடுகளிலும் குறைந்த வருமானம் கொண்டவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்” என்கிறார்.

உலக சுகாதார நிறுவனம் காற்று மாசுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளது.

1. நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் 29 சதவீத நோய்களுக்கு காரணமாகிறது.

2.சுவாச பாதிப்பால் ஏற்படும் மரணங்களில் 17 சதவீதம்

3. பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளில் 24 சதவீதம்

4. இதய நோயால் ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய்களில் 25 சதவீதம்

5. நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயால் இறப்புகள் மற்றும் நோய்களில் 43 சதவீதம்

தவிர, ‘கெமிக்கல் அண்ட் இன்ஜினியரிங் நியூஸ்’ (Chemical and Engineering News) என்ற ஆய்விதழ், டிமென்ஷியா, மன இறுக்கம், ஒருசில நரம்பியல் கோளாறுகள் ஆகியவற்றுக்கும் காற்று மாசு காரணமாகிறது என்கிறது.

காற்று மாசுபாடு

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைகளும் காற்று மாசுவினால் பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டால் குறைப்பிரசவம் ஏற்படுவது, எடை குறைவான குழந்தை பிறப்பது எனப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இப்படிப்பட்ட ஆபத்தான காற்று மாசுபாட்டிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்கிற வழி முறைகளையும் உலக சுகாதார நிறவனம் பட்டியல் இட்டுள்ளது.

1. வெளியில் செல்லும் முன் வானிலை அறிக்கைகள் மூலம் மாசு அளவை தினமும் சரிபார்த்தல்.

2. மாசு அளவு அதிகமாக இருக்கும்போது, வெளியில் செல்லாமல் தவிர்ப்பது

3. வாகனப்புகை அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லாமல் தவிர்ப்பது.

4. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் குண்டு பல்பு போன்றவற்றை தவிர்ப்பது

5. தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, பேருந்து போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துவது..

6. மரம் அல்லது குப்பைகளை எரிக்காமல் இருப்பது..

7. புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது..

எனப் பட்டியலிடுகிறது உலக சுகாதார நிறுவனம்

புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது, மரங்களை எரிக்காமல் இருப்பது என்பவை சரிதான். ஆனால் வயிற்றுப்பாட்டுக்காக நேரத்துக்கு ஓடுபவர்கள் நிறைந்த நாட்டில் காற்று மாசுபாட்டை அறிந்து, அதிகம் இருந்தால் வெளியில் செல்லாமல், சென்றாலும் அதிக வானப்புகை பகுதிகளை தவிர்ப்பதெல்லாம் நடக்காத விஷயம்.

ஆனால் அரசு சில முயற்சிகளைச் செய்யலாம்

பெட்ரோல் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மானியங்கள் வழங்கி மக்களை ஊக்கப்படுத்துவது, காற்று மாசு ஏற்படும் தொழிற்சாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, காற்று மாசு ஏற்படும் தொழிற்சாலைகளுக்கு வருங்காலத்தில் அனுதி மறுப்பது, முன்னேற்றம் என்ற பெயரில் காடு மலைகளைக் குடையாமல் இருப்பது…

இப்படிச் சில!

ஆனால் செய்வார்களா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.