டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது:
உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒரு நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறு செய்யும் முதல் மாநிலம் உத்தராகண்ட் இருக்கும். .
இவ்வாறு அவர் கூறினார்.