கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆறுதல் கூறினார். மேற்குவங்க மாநிலம் பிரிபூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பாக்டுய் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பாது ஷேக் என்பவர் கடந்த திங்கள்கிழமை அன்று கொலை செய்யப்பட்டார். அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பாக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றம், இன்றி பிற்பகல் 2 மணிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் நடைபெற்ற பாக்டுய் கிராமத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, அவர் ஆறுதல் கூறினார். வன்முறையில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழங்கினார். அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்ட வீடுகளை புணரமைக்க ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும், ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.