டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இவர்களில் 56 பேர் நிரந்தர நீதிபதிகளாகவும், 19 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் பணியாற்று வார்கள். தற்போது நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ளார். அவர் 14 பிப்ரவரி 2022 அன்று பதவியேற்றார். தற்போது நிரந்தர நீதிபதிகளாக 44 பேரும், அடிஷனல் நீதிபதிகளாக 15 பேர் என மொத்தம் 59 பேர் மட்டுமே உள்ளனர். 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனால், காலியாக இடங்களை நிரப்பக்கோரி அவ்வப்போது உச்சநீதிமன்றம் கொலிஜியத்திற்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்போது மேலும் 2 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 14 பணியிடங்கள் காலியாக உள்ளது.