காரைக்கால்: பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் முகப்பு மண்டபத்தை இடிக்க நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கூறி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்ட பேரணி சென்றனர்.
காரைக்கால் மாதா கோயில் வீதியில் உள்ள கைலாசநாதர் கோயில் வகையறாவைச் சேர்ந்த, பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில் கோபுர வாயில் முகப்பு மண்டபம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசுத் துறைகளின் அனுமதியின்றி பொது இடத்தை ஆக்கிரமித்து இந்த மண்டபம் கட்டப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 18-ம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம், முகப்பு மண்டபத்தை வரும் 28-ம் தேதிக்குள் இடித்து அகற்றுமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து, முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று உயர் நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரியும், முகப்பு மண்டபத்தை இடிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் சார்பில் பெரிய அளவிலான பேரணி ஒன்று நடத்தப்பட்டது. காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியை தஞ்சை வட்டார ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றது.
ஆனால், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகேயே பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். தொடர்ந்து இந்து அமைப்புகள், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக, இப்பேரணியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள், சமுதாய அமைப்புகளை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.