அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவ பிரதமரினால் விருதுகள் வழங்கிவைப்பு

அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டி – 2021 விருது வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்றது.

அரச ஊழியர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்தி மதிப்பீடு செய்து அந்த படைப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குதல் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கலாசார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் சிறுவர் கதைகள், கவிதைகள், பாடல்கள், குறுந்திரைப்படங்கள், சிறுகதைகள், புகைப்படங்கள் மற்றும் குறுநாடகங்கள் நாடு முழுவதிலுமிருந்து அரச ஊழியர்களினால் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படைப்புகளுக்கும் இங்கு விருதுகள் வழங்கப்பட்டன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களினால் சிங்கள வெற்றிப் படைப்புகளான ‘பிரபாஸ்வர’ மற்றும் தமிழ் வெற்றி படைப்புகள் மற்றும் வெற்றி பெற்ற இரண்டு சிங்களம் மற்றும் தமிழ் சிறுவர் நூல்களின் தொகுப்பை கௌரவ பிரதமரிடம் வழங்கிவைத்தார்.

சிங்கள மற்றும் தமிழ் குறுநாடக விருதுகளில் சிறந்த நாடகம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வழங்கினார்.

பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், ‘ அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டி – 2021’ இல் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்வில் தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.