‘ஃபரெஞ்ச் கிஸ்-க்கு வாய்ப்பே இல்லை’ வார்னர்- அப்ரிடி மோதலை கலாய்க்கும் ரசிகர்கள்

PAK vs AUS 3rd Test Tamil News: 24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. இந்நிலையில், பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த திங்கள் கிழமை (21ம் தேதி) முதல் நடைபெற்று வருகிறது.

முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 391 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 91 ரன்களும், கேமரூன் கிரீன் 79 ரன்களும் எடுத்தனர். அலெக்ஸ் கேரி (67), ஸ்டீவன் ஸ்மித் (59) அரைசதம் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் 81 ரன்களும், அசார் அலி 78 ரன்களும் சேர்த்தனர். அரைசதம் விளாசிய கேப்டன் பாபர் அசாம் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தொடர் நெருக்கடி கொடுத்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை சேர்த்துள்ளது. அரைசதம் விளாசிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ள நிலையில், மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 55 ரன்களுடனும், மார்னஸ் லாபுசாக்னே 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை விட 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

முட்டிக்கொண்ட வார்னர் – அப்ரிடி

இந்தப் போட்டியில் நேற்று 3ம் நாள் ஆட்டநேரத்தில் 2வது இன்னிங்க்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர். 3ம் நாள் ஆட்டநேரம் முடிவடைய இருந்த நிலையில், உஸ்மான் – வார்னர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் விக்கெட் எடுக்க துடித்த பாகிஸ்தான் அணியினர் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்தனர். இதைத் தடுத்து விளையாடி வந்த இந்த ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை ஓட விட்டனர். இதனால் பாகிஸ்தான் அணியினர் எரிச்சலின் உச்சத்திற்கே சென்றனர்.

இந்த தருணத்தில் பந்துவீச வந்த பாகிஸ்தானின் இடது வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி பேட்டிங் செய்த வார்னருக்கு ஷார்ட்-பந்தை அழுத்தி வீசினார். அதை தனது பாணியில் தடுத்தாடிய வார்னர் மறுமுனையில் இருந்த உஸ்மான் கவாஜாவை ரன் ஓட அழைத்தார். இதற்குள் பந்து கிடந்த இடத்திற்கு அப்ரிடி வந்து சேர்ந்தார்.

அப்போது வேகமாக ஓடிவந்த அவர் வார்னரிடம் சண்டைக்கு செல்வது முட்ட சென்றார். வார்னரும் வேகமாக நகர்ந்து வந்தார். இருவரும் ஒருவரையொருவர் சில வினாடிகள் முறைத்து பார்த்தனர். ஆனால், அடுத்த நொடியே புன்னகையை பறக்க விட்டு பிரிந்தனர். அப்ரிடி வார்னரிடம் முறைக்க சென்ற சில வினாடிகள் மைதானத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அவர்கள் புன்னகைத்த பின் தான் அங்கிருந்தவர்களுக்கு மூச்சு வந்தது.

வார்னர்- அப்ரிடி மோதலை கலாய்க்கும் ரசிகர்கள்

வார்னர் – அப்ரிடி முட்டிக்கொண்ட வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். இதில் ஒரு ரசிகர், ஹெல்மெட் தடையாக இருந்ததால் ‘ஃபரெஞ்ச் கிஸ்-க்கு வாய்ப்பே இல்லை’ என்று கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ ‘மைதானத்திற்குள் ரொமான்டிக் செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்றுள்ளார். இப்படியாக இந்த சம்பவத்தை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், 3ம் நாள் ஆட்டநேரம் முடிந்த பிறகு வார்னரை அப்ரிடி கட்டித்தழுவி புகைப்படத்தை வார்னர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது தான் ‘ஸ்பீர்ட் ஆப் தி கேம்’ என்று கூறி நெகிழ்ந்துள்ளனர்.

வார்னரின் விக்கெட்டை வீழ்த்திய அப்ரிடி

மற்றொரு சுவாரஷ்ய சம்பவம் என்னவென்றால், இன்று 4ம் நாள் ஆட்டநேரத்தில் வார்னரின் விக்கெட்டை அப்ரிடி தான் வீழ்த்தி இருந்தார். அதுவும் கிளீன் போல்ட்-அவுட் ஆக்கி இருந்தார். வார்னரின் ஆப் சைடில் பிட்ச் ஆனா பந்து அவரது ஆப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.