சென்னை: ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் கரோனா விதிமுறைகளை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு கூடி, தற்போதுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த 15 நாட்களாக தினசரி பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இறப்பை பொருத்தவரையிலும் பூஜ்ஜியம் என்ற அளவிலேயே இருக்கிறது. இருந்தாலும், அண்டை மாநிலங்களில் 500 முதல் ஆயிரம் பேர் வரை தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தென் கொரியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சத்தையும் தாண்டி தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, நாம் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு விட்டோம் என கருதாமல், இன்னும் 3 மாதங்களுக்கு கரோனா விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.