பிரஸல்ஸ்: உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடர்பாக நேட்டோ நாடுகளின் தலைவர்கள், பிரஸல்ஸில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று 29-வது நாளாக போர் நீடித்தது. உக்ரைன் தலைநகர் கீவ், மேரிபோல் உள்ளிட்ட நகரங்கள் மீதுரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நேற்று சந்தித்தனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்கி காணொலி வாயிலாக பேசினார். அவர் கூறும்போது, “ரஷ்ய ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது.பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து சிதறும்போது பொதுமக்களின் உடல்கள் வெந்து புண் ஆகின்றன. நேட்டோ நாடுகள் தங்களது ராணுவ ஆயுதங்களில் ஒரு சதவீதத்தை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். உக்ரைனுக்கு தாராளமாக ஆயுத உதவிகளை வழங்க வேண்டும். ரஷ்யாவுக்கு எதிராக ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும்” என்றார்.
உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்தனர்.
இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களில் அணுஆயுதங்களை வீசும் ஏவுகணை தளங்களை ரஷ்ய ராணுவம் நிலைநிறுத்தியுள்ளது. ரஷ்யாவிடம் சுமார் 2,000-க்கும்மேற்பட்ட சிறிய ரக அணு குண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. போரில் நேட்டோ நாடுகள் பங்கேற்றால் ரஷ்யா சிறிய ரக அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் என்று அஞ்சப்படுகிறது.
ஐ.நா.வில் ரஷ்யாவின் தீர்மானம்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்தது. இந்த தீர்மானம் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட கவுன்சிலில் ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற 9 நாடுகளின் ஆதரவு தேவை என்ற நிலையில் தீர்மானம் தோல்வியடைந்தது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும். ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திபிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.