புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியச் சட்டம் போன்ற சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், யூனியன் பிரதேச நிர்வாகிகள், இந்திய தலைமை நீதிபதி, பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், இந்திய பார் கவுன்சில், பல்வேறு மாநிலங்களின் பார் கவுன்சில் மற்றும் அனைத்து எம்.பி.க்களிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளை கேட்டுள்ளது.
நாட்டின் குற்றவியல் நீதி நடைமுறையில் விரிவான மறுஆய்வு தேவை என்று உள்துறைதொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் 146-வது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற நிலைக்குழு தனது 111-வது மற்றும் 128-வதுஅறிக்கைகளில், அந்தந்த சட்டங்களில் துண்டு துண்டான திருத்தங்களை கொண்டு வராமல், நாடாளுமன்றத்தில் ஒரு விரிவான சட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
அதிக செலவு ஏற்படாத மற்றும் விரைவான நீதியை வழங்குவதும் மக்களை மையமாகக் கொண்ட சட்ட கட்டமைப்பை உருவாக்குவதும் விரிவான திருத்தங்களுக்கான நோக்கமாகும். குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்க டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகள் மற்றும் அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை கருத்தில் கொண்டு ஒரு விரிவான சட்டத்தை கொண்டு வர அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ