ராமநாதபுரம் மாவட்டம் வாணி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் அப்துல்கபூர். கோழிக்கறிக்கடை நடத்திவரும் இவரின் மனைவி பெயர் சபிதாபானு (52). இவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம், சிவஞானபுரம் புதுப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான முகமது அரபுதீன் என்ற ரபீக் (33), கடந்த 2013 ஜூன் மாதம் தன் பெரியம்மா உறவு முறையுள்ள சபிதாபானுவிடம் தொழில் தொடங்க பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சபினாபானு மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரபீக், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சபிதாபானுவை சரமாரியாகக் குத்திக் கொலை செய்தார்.
சபிதாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரின் மருமகள் ஜெஸிமாபானு (23) மாடியிலிருந்து கீழே வந்திருக்கிறார். அப்போது ரபீக் அவரையும் கத்தியைக் கொண்டு தாக்கியிருக்கிறார். அதில் அவர் பலத்த காயமடைந்தார். அதையடுத்து, ரபீக் அங்கிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கேணிக்கரை போலீஸார் சபிதாபானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முகமது அரபுதீன் என்ற ரபீக்கை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரபீக்குக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.2.50 லட்சம் அபராதமும், அதைக் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா உத்தரவிட்டிருக்கிறார்.