பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7ன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 அமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்குவதாக வெளியான செய்திகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சென்ற வாரம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஒருவேளை சீனா, ரஷ்யாவுக்கு உதவினால் அவர்கள் பெரும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரும்.
சீனாவின் பொருளாதார எதிர்காலம், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டிலும், மேற்கத்திய நாடுகளுடன்தான் அதிகம் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை சீனா புரிந்துகொள்ள வேண்டும்” என்று பைடன் பேசினார்.
தொடர்ந்து ஜி-20 அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கப்பட வேண்டுமா? என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என்னுடைய பதில் ஜி-20 அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கப்பட வேண்டும் என்பதுதான்” என பைடன் பதிலளித்தார்.
கடந்த சிலதினங்களாக, ஜி-20 குழுவிலுள்ள சில நாடுகள், உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் காரணமாக, ஜி-20 குழுவிலிருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என கூறிவந்தன. அதைத்தொடர்ந்து, ரஷ்யா ஜி-20 குழுவின் ஓர் உறுப்பினர் மற்றொரு உறுப்பினரை நீக்க முடியாது என சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.